கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்! – பெரியார்

கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்! – பெரியார்

கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்!

-பெரியார்

12.1.1969 அன்று நாகை மாவட்டம் செம்பனார் கோவிலில் பெரியார்  ஆற்றிய சொற்பொழிவிலிருந்து… (விடுதலை 20.1.1969)

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு – பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல. தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்குத் தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

(குறிப்பு:  சாணிப்பாலுக்கும்,சவுக்கடிக்கும்  எதிராக கலகக்குரல் எழுப்பி நீண்ட காலமாக போராடி வந்த மக்களை வெறுமனே கூலி உயர்வுக்கு போராடிய மக்களாக பெரியார் சித்தரிப்பது தவறானது. ஒரு வாதத்திற்காக கூலி உயர்வுக்கு போராடினார்கள் என்றாலும் அந்த மக்களை எரித்துக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த மக்களை தீயிலிட்டு பொசுக்குவதற்கு உத்தரவிட்ட  கொடுங்கோலன் கோபால கிருஷ்ண நாயுடு மீது ஒரு கண்டனம் உண்டா?  பரிதாபமாக கருகிக்கிடக்கும் 44 உயிர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை உண்டா? தப்பிப் பிழைத்தவர்களிடம்  நேரில் சென்று ஆறுதல் கூறியது உண்டா? எதுவுமே செய்யாமல் கம்யூனிஸ்டுகள் தான் தூண்டி விட்டார்கள் என்று பெரியார் வசைபாடுவது திசை திருப்பும் முயற்சியேயன்றி வேறல்ல.)

One thought on “கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்! – பெரியார்

  1. கீழ வெண்மணி பெரியாரின் உரை எதை பறைசாற்றுகிறது.. என்று பார்ப்போம், கூழி உயர்வுக்காக போராடிய மக்களை தீயில் இட்டுக் கொளுத்தியது, கோபால நாய்யிடு அதர்க்கு துணைநின்றது அன்றைய திமுக அரசு,. அப்போராட்ட கலவரத்திற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சியே என்று சொல்லுகின்ற பெரியாரின் சுயமரியாதையை இயக்கம்., மேலும் கூழி உயர்வுக்கு பொருளாதார வளர்ச்சியே / நிலமைகள் தான் காரணம் , என்று வரையறை செய்த பெரியார், ஏன் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு பொறுப்பில்லை என்று முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்… இப்படி கூழி உயர்வுக்கு கூட போராடத சீர்திருத்த பெரியார் இயக்கம்.. என்ன சாதிக்க முடியும்.. உண்மையில் இது போன்ற இயக்கங்கள் முதலாளித்துவ வர்க்கத்திற்கு முட்டுக் கொடுத்து, புரட்சிக்கு துரோகம் விளைத்திகுக்க கூடியது என்பதை மக்கள் உணராதவரை, பாட்டாளி வர்க்க விடுதலைக்கு சாத்தியம் இல்லை …
    காரல் சின்னு..

    Like

Leave a comment