Category: பெரியாரின் முரண்பாடுகள்

மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.

ஈ.வெ.ரா. மொழித் துறையில் வெறும் இராமசாமிதான்!
-பெருஞ்சித்திரனார்

பெரியார் ஒரு தமிழ் மொழி எதிர்ப்பாளர் என்று கூறினால் பெரும்பாலான பெரியாரியாவாதிகள் இக்கூற்றை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இக்கூற்றை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஏற்றுக் கொண்டு “பெரியார் மொழித் துறையில் வெறும் இராமசாமி” என்று கூறியுள்ளார். பெரியாரை சீர்திருத்தவாதியாக ஒப்புக் கொள்ளும் பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் தமிழ்மொழியை இழிவாகப் பேசிவந்த பெரியாரை கடுமையாக கண்டித்து
தமது ஏடான தென்மொழியில் எழுதினார்.

1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி” எனும் தலைப்பிட்டு பெருஞ்சித்திரனார் ஒரு கட்டுரை தீட்டினார். அது காலத்தை கடந்து இப்போது புதிதாக எழுதப்பட்டதைப் போல தோற்றம் அளிக்கிறது. இக்காலத்தில் பெரியார் குறித்த மதிப்பீடுகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பெரியார் பிம்பம் உடைக்கப்பட்டு வருவதை நாம்அறிவோம்.

ஆனால் இதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பெருஞ்சித்திரனார் தமக்கே உரிய நடையில் பெரியாரை காயப்படுத்தாமலே விளாசித் தள்ளியிருப்பது வியப்பைத் தருகிறது.

பெரியார் தமது மதிப்பை தமிழ் எதிர்ப்பின் மூலம் இழந்து விட வேண்டாம் என்று பெருஞ்சித்திரனார் கேட்டுக் கொண்டும் பெரியார் தன்னை திருத்திக் கொள்ள வில்லை. ஒரு கூலிப் புலவரை எழுத வைத்து தமது தமிழ் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். “தமிழ் மொழி ஒருகாட்டுமிராண்டி மொழி” என்று பெரியார் திரும்பத் திரும்ப கூறிவந்த நிலையில், பெருஞ்சித்திரனார் “தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியே” (தென்மொழி, அக்டோபர், 1967) என்று தலைப்பிட்டு மீண்டுமொரு கட்டுரை மூலம் பதிலடி தந்தார். ஆனாலும் பெரியார் சாகும்வரையிலும் தமிழ் எதிர்ப்பை கைவிடவில்லை என்பதே உண்மை.

பின்வரும் பெருஞ்சித்திரனார் எழுதிய “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி” எனும் விரிவான கட்டுரையை படித்துப் பார்த்தாவது பெரியாரியவாதிகள் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி!

கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று “விடுதலை” யில் ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம். அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றி யுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.

அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி, அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துளளதாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.

இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ , அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.

ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம். அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.

தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். பக்தவத்சலம் ஆரிய அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ, அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்…..

ஈ.வே.இரா. தமிழர்களின் தன்மான உணர்விற்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் பாடுபட்ட வகையில் போற்றப்பட வேண்டியவர்; புகழப்பட வேண்டியவர்;
ஆனால், தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இவர் அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்திருக்கின்றார். ஆரியப் பார்ப்பனர்களின் தில்லுமுல்லுகளையும் , அவரால் தமிழுக்கு நேர்ந்த- நேரவிருக்கின்ற கேடுகளையும் புடைத்துத் தூற்றி எடுத்துக் காண்பிக்கும் மதுகை படைத்த இவர், ஆரிய மொழியால் தமிழ் மொழிக்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நேர்ந்த தீங்கை ஒப்புக் கொள்வதில்லை; ஒரோவொருகால் ஒப்புக் கொண்டாலும் அதை விலக்க எவ்வகை முயற்சியும் செய்வதில்லை; ஒரோவொருகால் செய்தாலும் அதைக் கடனுக்காகவே, அவருடன் சேர்ந்திருந்த உண்மைத் தமிழன்பர் தம் கண்துடைப்புக்காகவே செய்திருக்கின்றார்.

பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார். இவரோ “பண உதவி ஏதும் செய்ய முடியாது; வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்; நான் விற்றுத் தருகின்றேன்.” என்று கூறினாராம். பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம். பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.

பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசிக் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம். அவர்களை நாமும் பாராட்டுவதில்லை . அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான். ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?

உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ? ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?

உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால், இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்?

பாவாணர், பாரதிதாசன் போன்றவர்களையும் இவர் கண்ட சேசாசலம், முத்துச்சாமி, சங்கரதாசு, கதிரைவேல் போன்றவர்களாகவே கருதிக் கொண்டாரோ? இல்லை, தாம் என்ன என்னவற்றை அறிந்திருக்கின்றாறோ அல்லது தமக்கு எவை எவை புரிகின்றனவோ அவையவை மட்டுந்தாம் அறிவுக்குப் பொருந்தியவை; சிறந்தவை; உலகமெல்லாம் பின்பற்றத் தக்கவை என்று கருதிக் கொண்டாரோ?

தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை. தமிழிலும் அதில் உள்ள மேலான உளவாழ்விற்கு அடிகோலும் நூல்களிலும் இவர் எதை எதைத் தேடுகின்றாரோ? நமக்குத் தெரியவில்லை.

ஆரிய அடிமைப் புலவர்கள் சிலர் இடைக்காலத்தில் ஆக்கி வைத்த கம்ப இராமாயணம், பெரிய புராணம், வில்லி பாரதம் முதலிய பார்ப்பன அடிமைப் பழங்கதை நூல்களே தமிழ் என்று நினைத்தால் தமிழ்மொழியில் மாந்தவாழ்விற்கான இலக்கிய நூல்களே இல்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் இப்பொழுதுள்ள கழக நூற்களையும், இறந்துபட்ட ஆயிரக்கணக்கான மெய்யிலக்கியங்களையும் கண்டும், கேட்டும், உணர்த்தும் கூட இவர் தமிழைப் பழிப்பதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமானால் தமிழ்மொழியில் என்னென்ன இல்லை என்று இவர் கூறட்டும்; அதன்பின் நாம் என்னென்ன இருக்கின்றது என்று காட்டுவோம்.

அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களில் உருசிய நாட்டின் இலெனினையும் ; மார்க்சையும்; கிரேக்க நாட்டின் சாக்ரடீசையும் எப்படி இவர் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? வேண்டுமானால் தொல்காப்பியரைப் போல், வள்ளுவரைப் போல், திருமூலரைப் போல் உலகில் உள்ள நாடுகளில் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று இவர் காட்டட்டும்! நாமும் இவர் கூறும் – இவர் விரும்பத்தக்க இவர் மதிக்கத்தக்க அறிஞர்களையும், பெரியோர்களையும் தமிழிலும் காட்டுவோம்.

பொதுமக்களின் உணர்வுகளை இவர் நன்கு உணர்ந்தவர் என்பதாலேயே, அறிஞர்களின் அறிவை இவர் நன்கு உணர்ந்தவர் ஆகி விடார். இவரின் கடவுள் வெறுப்புக் கொள்கை இந்நாட்டுச் சூழலில் இவர் கூறும் சீர்திருத்தத்திற்குச் சிறு அளவிலோ, பேரளவிலோ ஒருவாறு பொருந்துவதாகலாம். ஆனால் அதுவே மாந்தர்க்கு வேண்டிய நிறைவான கொள்கையாகி விடாது. குமுகாய குப்பைக் குழிகளில் இவர் எண்ணத்திற்கும் கருத்திற்கும் சொற்களுக்கும் வேண்டிய தீனி நிறைய உண்டு. அதனாலேயே அறிவுக்கருவூலம் இவருக்குத் திறந்த கதவாகிவிடாது. ஆரியப் பார்ப்பனரின் கலவைக் கொள்கைகளுக்கு இவர் பெரியதொரு சம்மட்டியாகாலாம். அதனாலேயே தமிழர்களின் உள வளர்ச்சிக்கும் மீமிசை மாந்த வளர்ச்சிக்கும் இவர் ஏணியாகி விடமுடியாது.

இவர் சீர்திருத்தம் பாராட்டக் கூடியது; பொதுமைக் கருத்து வரவேற்கக் கூடியது; துணிவு வியக்கக் கூடியது; முயற்சி போற்றக் கூடியது; அதனாலேயே இவருடைய அறிவும் பின்பற்றத்தக்கதாகி விடாது. முட்செடிகளை அகற்றி மலர்ச்செடிகளை வளர்க்கப் பாடுபடும் ஒருவன் நல்ல தோட்டக்காரனாகலாம். அதனால் அவன் அந்த மலர்ச் செடிகளையே படைத்தவன் ஆகிவிடமுடியாது. அதில் மலரும் மலர்களுக்குக் கட்டளையிடவும் முடியாது.
இவருடைய சீர்திருத்தத்தை – முயற்சியை – தொண்டைக் கொண்டு- மக்கள் இவரைப் பாராட்டுவதைக் கண்டு, அம்மக்கள் எல்லாரும் தம்மையே மீமிசை மாந்தனாகக் கருதிக் கொண்டுள்ளனர் என்று இவர் தவறாக எண்ணிக் கொண்டார் போலும்; அப்படி எண்ணி இவருக்குத் தொடர்பில்லாத செய்திகளில் – மெய்யறிவுணர்வுகளில் இவர் கருத்தறிவிப்பது இவர் பேதைத் தன்மையையே காட்டும்.

தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள புகுத்தப்பட்டுள்ள இடைக்காலக் கருத்துகளைப்பற்றி ஆராய்ந்து, அக்கருத்துகள் யாவும் பிறரால் இம்மொழி பேசிய மக்களை ஏமாற்றுவதன் பொருட்டு எழுதி வைக்கப்பட்டதாகும் என்று தெரிந்த இவர், அப்பாழ்வினைக்குத் தமிழ் மொழி மேல் குற்றங்கூறுவது எப்படி சரியாகும்?
தமிழ் மக்களுக்கு ஒவ்வாத கருத்துகளை ஒதுக்கப் புகுந்த இவர் அக்கருத்துகளோடு தமிழர்களுக்கே உயிராகவிருந்த ஒழுகலாறு, மெய்யுணர்வு, உளத்தூய்மை முதலிய உயர்ந்த கொள்கைகளின் உள்ளுக்கங்களையும் ஒரேயடியாகத் துடைத்தெடுக்க முற்பட்டு விட்டார்.

ஆரியக் கடவுள் கொள்கைகளைச் சாடவந்த இவர் தமிழரின் ஒரு தெய்வக் கொள்கையையும் கண்டிக்க – கண்மூடித்தனமாக இவர் செய்த முயற்சி- ஆரிய அழுக்கை ஒருவாறு அகற்றியதேனும் , தமிழர் பண்பாட்டையுமன்றோ சிதைத்தெறிந்து விட்டது. இற்றைத் தமிழகத்தில் நிலவியிருக்கும் பண்பாட்டுத் தாழ்வுக்கு இவரும் இவர் மட்டையடிச் செய்கைகளும் கூட ஓரளவு காரணம் என்று கூறலாம்.
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது போல் தமிழகத்தில் வந்து கலந்த ஆரியரின் பல தெய்வக் கொள்கையை ஒழிக்கப் பாடுபட்டுப் பேய்த் தன்மையை வளர்க்கவே பயன்பட்டது இவரியக்கம் எனினும் மிகையில்லை.

இவ்வளவு அரும்பாடு பட்டும் இவர் எதிர்த்துப் போராடுகின்ற பார்ப்பனரின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தாமற் போனதற்கு , இவர் தமிழ் மேலும் தமிழ்ப் பண்பாட்டு மேலும் முழு நம்பிக்கை வைக்காமையே காரணம். எய்தவன் இருக்க அம்பை நோகும் இவர் செய்கைக்கு நாம் மிகவும் வருந்துகின்றோம்.

தமிழில் இதுவரை நல்ல நூல்கள் வெளிவரவில்லை என்று பழி சுமத்தும் இவர் , இவ்வுலகில் உள்ள எந்த மொழியில் வெளிவந்த எந்த நூல் தான் எந்தப்பகுதி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்தது என்று கூறுதற்கியலுமா?

உலகில் உள்ள நூல்கள் பலவகைப்பட்ட.ன. ஒரு தோட்டத்தில் உள்ள மலர்களைப் போல் பல்வகை மணங்களும் நிறங்களும் கொண்டன. அதில் மல்லிகை மலருக்கு , முளரி (ரோசா) மலரைப் போல் வண்ணமில்லையே என்றும் , மகிழ மலர் போல் மணமில்லையே என்றும் கூறிக் கொண்டிருப்பது பேதைத்தனமேயன்றி மலரில் உள்ள குறைபாடு ஆகாது.
தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் , சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும், புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் , மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் , அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் , திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும், திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.

இவையன்றி இக்கால அறிவியல் வளர்ச்சிக்குப் பொருந்தும் படியான நூல்கள் எவை எனின், இக்காலத்துச் செய்முறை அறிவு நூலை அக்காலத்திலேயே எப்படி எழுதி வைத்திருக்க முடியும்? என்றாலும் நம் தமிழில் உள்ள நூல்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட ஒரு நிலையில் நாம் இத்தகைய கேள்வியை இரக்க உணர்வோடு கேட்க வேண்டுமே யன்றி, இழிவுணர்வோடு கேட்பதும், தமிழையே காட்டு மிராண்டிக் காலத்து மொழி, நாகரிக காலத்திற்குப் – பகுத்தறிவுக் காலத்திற்குப் பொருந்தாத மொழி என்றும் இடித்துரைப்பதும் ஈ.வே.ரா.வின் பேதைமையையே காட்டும்.

அவர் கருதும் காட்டுமிராண்டித்தனம் என்பது என்ன? நாகரிகம் என்பது எது? பகுத்தறிவு என்பது எது? என்பதைக் தெளிவாகக் கூறட்டும். நாம் அதன்பின் அத்தகைய காட்டுமிராண்டித்தனம் தமிழில் என்ன இருக்கின்றது என்று கேட்போம். அவர் கூறும் நாகரிகமும் பகுத்தறிவும் எந்த நூலில் இல்லை என்று சூளுரைத்துக் கேட்போம்.

ஆரியர்களின் சூழ்ச்சியால் இற்றைக் காலத்துள்ள தமிழ் மக்கள் பெரும்பாலாரிடம் தமிழ் மானத்தையும், தமிழ் அறத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் எப்படிப் பார்க்க முடிவதில்லையோ , அப்படியே ஆரியரால் அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ள நூற்களிலும் நாம் முழுவதும் பாராட்டுகின்ற அளவிற்குத் தமிழ்த் தன்மைகளைப் பார்க்க முடியவில்லை என்பது உண்மையே! ஆனால் அதற்காகத் தமிழ் மொழியையே தாழ்த்திக் கூறுவது எப்படி அறிவுடைமையாகும் .

சீதையின் கற்பாராய்ச்சியையும் இராமனின் கோழைக் கண்டு பிடிப்பையும் ஆரிய தெய்வங்களின் இழிநிலை ஆய்வுகளையும் செய்வதில் “வல்லவர்” என்பதாலேயே , இவர் தமிழ் மொழி ஆராய்ச்சியையும் செய்வதில் வல்லவராகி விடமாட்டார்.

கால்டுவேலரும் , போப்பும் , பெசுக்கியும் , சார்லசு கோவரும் , எலிசா ஊலும் , சான்முர்தோக்கும் , செசுப் பெர்சனும் , கிரையர்சனும் , பெரடெரிக் பின்காட்டும் , கிரேயலும் ,எமினோவும் , பரோவும் , சேம்சு ஆலனும், மறைமலையடிகளும் , திரு.வி.க.வும் , பாவாணரும் தெரிந்து கொண்டவற்றை விடப் பெரியார் ஈ.வே.இரா. தமிழைப் பற்றி மிகுதியாகத் தெரிந்து கொண்டு விட்டார் என்று நாம் கருதிவிட வேண்டா.

அவர் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வே.இரா. மட்டும் தான். உலக அறிவியல் கழகத்தின் தமிழ் ஆய்வியல் பேராசிரியர் பெரியார் அல்லர்; என்பதைத் தமிழன்பரும் பிறரும் உணர்ந்து கொள்வாராக. எனவே அவர் பட்ட ( அநுபவ) அறிவில் கண்ட உண்மையே தமிழ் என்னும் காரண அறிவுக்கு முடிவாகி விட முடியாது.

இவர் அரசியல்காரர்; அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ , வரலாற்றுப் பேராசிரியராகவோ, மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது. அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.

எனவே அவை அறிவுக்குத் தொடர்பில்லாத கருத்துகளே என்று கருதி விடுக்கவும். எவரும் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இவர் அரசியலைப் பொறுத்தவரை ஓர் இலெனினாக இருக்கலாம்; குமுகாயவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக இருக்கலாம்; பொருளியலைப் பொறுத்தவரையில் ஒரு மார்க்சாக இருக்கலாம்; சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு பெரியராகவும் இருக்கலாம்.

ஆனால் மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.

இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார் . இறைவன் உண்மையை மறுப்பதாலேயே இவர் முழுமையான அறிவாளாராகி விடமாட்டார்.

நெப்போலியன் ஒரு வீரமறவன் ; ஆனால் மனத்தூய்மையில் அவன் புத்தரைப்போல வழிபடத்தக்கவனல்லன். சாக்ரடீசு ஓர் அறிஞன்; ஆனால் அவன் இயேசுவைப் போல் பின்பற்றத்தக்கவனல்லன்; மார்க்சு பொதுவுடைமைத் தந்தை; ஆனால் வள்ளுவரைப்போல் மெய்யுணர்வினன் அல்லன்; சீசர் தன்னிகரற்ற ஓர் அரசியல் தலைவன்; ஆனால் அவன் எமர்சனைப் போல் மீமிசை உணர்வு படைத்தவன் அல்லன்; இலெனின் ஒரு நாட்டுக்கே புத்துணர்வூட்டிய வழிகாட்டி; ஆனால் அவன் ஐன்சுடீன் போன்ற அறிவியலறிஞன் அல்லன்;
அவர்களைப் போலவே ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்; பகுத்தறிவு வழிகாட்டி; அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். தமிழரின் குமுகாய அமைப்பைச் சீர்திருத்தியவர் என்பதற்காகத் தமிழையே சீர்திருத்தத் தொடங்குவது அவர் அறியாமையாகும்.

அது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவது போன்ற மடமைச் செயலாகும். பூச்சி அரித்த இலைகளையும், கிளைகளையும் கழிக்க முற்படுவதுடன் பரந்து வேரோடிய மரத்தையும் வெட்டிச் சிதைக்கும் ஓர் அடாத செயலாகும்.

அண்மையில் ஏப்பிரல் 22, 23, 24-ஆம் பக்கல்களில் இலண்டனில் சேக்சுபியர் பிறந்த நாளை அரசியல் பேரறிஞர்கள் உட்பட்ட எல்லாரும் கொண்டாடுவது, அவர் அறிவியல் அறிஞர், அல்லது நாட்டின் சீர்திருத்தக்காரர் அல்லது பகுத்தறிவு மேதை, அல்லது அந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் என்னும் காரணங்களுக்காகவா? அவர் ஒரு மொழிப் புலவர்; பாவலர் என்பதற்காகவே ஆகும். நம் நாட்டுப் பழம்பெரும் புலவர்கள் அவரைவிட எவ்வகையில் தாழ்ந்தவர்கள் என்பதைப் பெரியார் கூறட்டும்.

ஆரியர் சூழ்ச்சிகளால் இடைநாட்களில் ஏற்பட்ட சில்லறைப் புலவர்கள்
“புலவர்கள்” என்ற பெருமைக்குரியவர்களே அல்லர். எனவே அவர்களை நாம் பரிந்துரைக்கவும் இல்லை. இவர் மதிக்கின்ற மேலை நாடுகளில் அத்தகைய அளவுக்கு ஆண்டு தோறும் பெரும் புலவர்களுக்கு விழாவெடுத்துப் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இங்கோ தமிழர்களுக்கு விடுதலை தேடித்தருகின்றேன் என்று கூறும் ஒரு தலைவர், தமிழைப் பற்றியும், உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று; தமிழர் எல்லாருக்கும் வந்த இழிவாகும். தமிழ் நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம். உண்மைத் தமிழர்களுக்கு எள்ளளவும் மகிழ்ச்சி ஊட்டாது; மாறாக வெறுப்பையே ஊட்டும் என்று அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கருதிக் கொள்வார்களாக.

இவர் “தமிழ் படிப்பதால் பயன் ஒன்றுமில்லை” என்ற தம் கருத்துக்கு வலிவாக, எவனோ சொத்தை சோம்பேறிப் பாவலன் (!) ஒருவன் கூட்டி வைத்த உமிப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றுமில்லை யென்று ஊதிக்காட்டி அவனுடன் அவரும் அழுதிருப்பது அவர் அறிவுக்கு இழுக்கு என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறரை எப்படிக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்று இவர் கூறுகின்றாரோ, அப்படியே உண்மைத் தமிழர் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்று எச்சரிக்கின்றோம்.

தப்பித் தவறித் தன்மானம் கெடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரையே, மெய்ம்மைத் தமிழையே தாழ்த்தும் இப்படிப்பட்ட கருத்துரைகளால் , பெரியார் தமக்கிருக்கும் ‘பெரிய’ மதிப்பை இழந்துவிட வேண்டா என்று இவரை பல்லாற்றானும் கேட்டுக் கொள்கின்றோம்.

-பெருஞ்சித்திரன் .
நன்றி: தென்மொழி இதழ், ஏப்ரல் , 1967.

தமிழக எல்லை மீட்புப் போராளி கா.மு.செரீப்

தமிழக எல்லை மீட்புப் போராளி கா.மு.செரீப்

தமிழக எல்லை மீட்புப் போராளி
கவி கா.மு.செரீப்
நினைவு நாள் 7.7.1994

(திரைப்படப் பாடலாசிரியர் என்று மட்டுமே அறியப்பட்டவர் கவி.கா.மு.செரீப். அவர் தமிழ்மொழி மீதும், தமிழினத்தின் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் வைத்திருந்த பற்றை பலரும் சொல்வதில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டு எல்லைகளை ஆந்திரர், கன்னடர், கேரளர் ஆகிய இனத்தவரிடமிருந்து மீட்டெடுக்க தமிழரசுக் கழகத்தோடு இணைந்து தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

இதற்காகவே சாட்டை (இதழ்) எடுத்து தமிழின உணர்ச்சியை பாடல்கள் மூலம் தட்டியெழுப்பியவர். இது குறித்து அவர் தொகுத்து எழுதிய ”களப்பாட்டு’ நூலில் முன்னுரையில் எழுதியதை அப்படியே தருகிறோம்.)

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் எந்த மாநிலமும் தனி ஒரு மொழியினைக் கொண்டதாயில்லை. எல்லா மாநிலங்களிலுமே ஆங்கிலம்தான் ஆட்சிமொழி, பயிற்சி மொழி, நீதிமொழி, நிர்வாக மொழி!

இன்றைய இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலமொழியே ஆட்சிமொழி. மாநிலங்களின் பெயர்களும்கூட மாநில மொழிகளின் பெயராலேயே உள்ளன. இவ்வாறாக அமைந்திட வேண்டும் என்பதே பழைய காங்கிரஸ் கொள்கை. காந்திஜி வகுத்தளித்த திட்டம். ஏனைய தேசியத் தலைவர்களெல்லாம் ஏற்றுக்கொண்டதுமாகும்.

சுதந்திரம் கிட்டியவுடன் மாநிலங்களின் புனரமைப்பிற்கான செயற்பாடுகளைத் தொடங்கினர்.

தமிழகத்தின் நிலைமட்டும் வேறுவிதமாயிருந்தது. இங்கேயுள்ள கட்சிகள் எது ஒன்றும் இப்பிரச்சினையில் அக்கறை காட்டிடவில்லை!

‘மதராஸ் மனதே’ என்றனர் ஆந்திரர். “காசர்க் கோடு முதல் கன்னியாகுமரி வரை தமதென்றனர் கேரளியர். ‘நீலகிரி மட்டுமின்றி கோயமுத்தூரும் தங்கட்கே” என்றார்கள் கன்னட நாட்டினர்.

தமிழர்க்குரிய பகுதிகளைக் காத்திடவோ கேட்டிடவோ எவரும் முன்வரவில்லை. “மதராஸ் மனதே” எனச் சென்னை நகரின் தெருக்களில் பேரணி நடத்தினர் ஆந்திரர். ‘தஞ்சை மாவட்டமும் மதுரை மாவட்டமும் எங்களவையே, அவை தெலுங்கர் ஆண்ட பகுதிகள் எனவும் பேசத் தொடங்கினர்.

ஆந்திர – கேரள – கன்னடக்காரர்களிடமிருந்து தமிழ் நாட்டை, தமிழ் நிலத்தைக் காத்திடவும், பறிபோய்விட்ட எல்லைகளை மீட்டிடவும் தமிழர்கட்கு ஓர் அமைப்பு தேவைப்பட்டது. தமிழர்க் கழகம் துவக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இணைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கு நூறெனத் தமிழர்கள் வாழுகின்ற அப்பகுதியைத் தமிழகத்துடன் இணைத்திட வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் கொதித்தெழுந்து கூறினர். அதற்கென அவர்கள் கண்ட அமைப்பு, ‘திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்!’. அதன் செயற்பாட்டினர் “தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்திட வேண்டும்” என இயக்கம் கண்டனர்.

திருப்பதி முதல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைத்திட வேண்டும் என்பதற்கு அங்குள்ள தமிழர்கள் இயக்கம் துவக்கினர். அந்த இயக்கத்தின் பெயர், ‘வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி’. தெற்கிலும் வடக்கிலும் உள்ள இந்த இரு அமைப்புகளுடனும் தொடர்புகொண்டு தமிழரசுக் கழகம் செயல்படத் தொடங்கிற்று.

விளக்கக் கூட்டங்கள் வேகமாக நடந்தன. பல இளைஞர்கள் தமிழ் மாநிலம் அமைத்திடத் தங்களின் உயிரையும் பொருட்டாக மதிக்காமல் உழைத்திட முன் வந்தனர். நாடு முற்றிலும் தமிழரசுக் கிளைக்கழகங்கள் ஆரம்பமாயின. பல ஆயிரம் தொண்டர்கள் சேர்ந்தனர். பலமான அமைப்பாகத் தமிழரசுக் கழகம் வளர்ந்தது.

பத்திரிகைகளின் ஆதரவில்லை. கட்சிகளின் ஒத்துழைப்பில்லை. பணபலமும் இல்லை. ஆனால் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிற்று. மும்முனைகளிலும் போராட்டம் வலுவாக திருவிதாங்கூர் கொச்சி ராஜ்ஜியம் (கேரளத்திற்கு அன்றுள்ள பெயர்) மட்டுமல்ல, மதராஸ் ராஜ்ஜிய அரசும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பல்லாயிரம் பேர் சிறைப்பட்டனர். இருவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தனர். இருவர் சிறைச்சாலையில் உயிர்துறந்தார்கள்.

சென்னை நகரை ஆந்திரர்கட்கும் தமிழர்கட்கும் சரிபாதியாகப் பிரித்தளிப்பதென்ற மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

சென்னையை சி.ஸ்டேட்டாக டில்லியின் கீழ் வைப்பதென்கின்ற திட்டம் உடைத்தெறியப்பட்டது. சென்னை தமிழர்கட்கே என ஆக்கப்பட்டது.

கன்னியாகுமாரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது; 1957 நவம்பர் முதல் நாளன்று.

சித்தூர் மாவட்டம் முழுமையுமாக ஆந்திர்கட்கென ஆக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி, திருத்தணி தாலுகா மீட்கப்பட்டது; 1960 ஏப்ரல் முதல் நாள்.

திருத்தணி மீட்சியில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டியின் செயற்பாடு மிக அதிகம். இதற்கெனவே உழைத்து உயிர் துறந்தவர் மங்களம் கிழார் எனும் மாமனிதர். மற்றும் திருத்தணி சுப்பிரமணியம், விநாயம் எம்.எல்.ஏ. போன்றோரும் குறிப்பிடத்தக்கவராவர்.

கன்னியாகுமரி மாவட்ட மீட்சியின் பெரும் பங்கு தி.த.நா. காங்கிரஸ் அமைப்பினரையே சாரும். அதில் அங்கம் வகித்த பெரிய மனிதர்கள் பலர். செல்வாக்கு மிகுந்த அவர்களைச் செயற்படச் செய்த செயலாளர் தெற்கெல்லைத் தளபதி எனப் பெயர் பெற்ற திரு. ‘பி.எஸ்.மணி. இவர் சுதந்திரப் போராட்டத் தியாகியுமாவார்.

“இப்போராட்டங்களில் என் பங்கும் குறைந்ததன்று. திங்கள் இரு முறை ஏடுகள் இரண்டும் கிழமை ஏடு ஒன்றுமாக மூன்று ஏடுகளை நடத்தினேன். தமிழகமெங்கும் சுற்றி சொற்பொழிவுகள் ஆற்றினேன். பொதுச் செயலாளனாகப் பொறுப் பேற்றுச் செயல்பட்டது மட்டுமின்றி, பல போராட்டங்களையும் முன்னின்று நடத்தினேன்; சிறைப்பறவையுமானேன்.

நானும் தலைவர் ம.பொ.சி. அவர்களும் இணைந்து செயல்பட்டது. சமயம் கடந்த இனவழி ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தமிழக எல்லைப் போராட்டத்தையும் அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நான் எழுதிய பாடல்கள் அனைத்தும் அச்சிடற்கெனத் தேடியபோது இந்நூலில் உள்ள அளவே; கிட்டியதும் முழுவதுமாக வெளிவரும்.

இந்திய மாநிலங்களின் சீரமைப்பு பற்றியும், அந்த அடிப்படையில் புதிய தமிழகம் அமைந்தது பற்றியும் ஒரு நூல் வருமானால் ஆய்வாளர்கட்கு மிகவும் பயன்தரும். எழுதிட எண்ணம், இறையருள் துணை நிற்குமாக!

இந்நூல் அளவில் சிறியதேயாயினும் வரலாற்றுச் சிறப்புடையது. 1947க்குப் பின்னர் 1960 வரையிலுமான சில நல்ல தகவல்களை இந்நூல் தருகின்றது”

நன்றி: உங்கள் நூலகம் இதழ் – சூலை -2022

பரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்! – 

பெரியாருக்கு ம.பொ.சி. பதிலடி!

1960இல் காமராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்குக் காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். பெரியார் வீட்டு மொழியும், தமிழ்நாட்டு மொழியும் ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று வாதாடினார்.  இந்நிலையில், தமிழகமெங்கும் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி. எழுதியும் பேசியும் வந்தார். அப்போது பெரியார் ஆத்திரப்பட்டு ம.பொ.சி.க்கு கொடுத்த பட்டம்தான் “தாய்ப்பால் பைத்தியம்”. இத் தலைப்பிட்டு பெரியார் 1.12. 1960இல் விடுதலை ஏட்டில் அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு ம.பொ.சி. பதிலடி தரும் வகையில்
25.12.1960இல் ‘செங்கோல்’  இதழில்  பரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்” என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினார்.
ம.பொ.சி. நாகரீகச் சிந்தனை படைத்தவர்.
அவர் பேச்சிலும், எழுத்திலும் அநாகரீகம் தலை தூக்காது. அவர் நினைத்திருந்தால் பெரியாருக்குப் பதிலடி தரும் வகையில் ,  “புட்டிப்பால் பைத்தியம்” என்று தலைப்பு வைத்திருக்கலாம். அவ்வாறு ம.பொ.சி. செய்யவில்லை.

அக்கட்டுரையின் இறுதியில் ம.பொ.சி. கூறுகிறார்: “தமிழ் மொழியே தேவையில்லை, ஆங்கிலத்தை வீட்டு மொழியாகவும் செய்து கொள்ளலாம் என்று பெரியார் சொல்வாரானால், அவரே தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக வந்து சட்டம் போட்டாலும் அது நடக்கப் போவதில்லை”.

ம.பொ.சி. வெளிப்படுத்திய அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் அவரின் வாரிசு இயக்கங்கள் தமிழை அழிக்கும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது வீட்டிலும், தமிழ்நாட்டிலும் ஆங்கிலேமே கோலோச்சுகிறது. தமிழுக்குரிய இடத்தில் ஆங்கிலம் நீடிப்பது அவமானம் என்ற சிந்தனை திராவிட ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பது வேதனைக்குரியது.  ம.பொ.சி. அன்று பெரியாருக்கு எழுதிய கட்டுரையை கேள்வி- பதில் வடிவில் மாற்றி அமைத்துள்ளேன். தமிழர்கள் படித்து தெளிவு பெறல் நன்று. தமிழுக்கான நீதி கேட்கும் போரில் நீங்கள் யார் பக்கம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1.(ஒன்று)

பெரியார்:
ஆங்கிலம் பயின்று பட்டம் பெறாததால் தான் ம.பொ.சி.க்கு தாய்ப்பால் பைத்தியம் பிடித்திருக்கிறது.

ம.பொ.சி:
இந்தத் தாய்ப்பால் பைத்தியம் எனக்கு மட்டுமல்ல, ஆங்கில மொழியில் கவிபுனையும் ஆற்றல் பெற்ற கவி தாகூருக்கும் உண்டு. பரங்கி மொழியில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியாருக்கும் உண்டு, அவர்களுக்கு மட்டுமா? ஆங்கிலயருக்குக் கூட உண்டு. இதனைப் பெரியார் அறியார் போலும்!

2..(இரண்டு)

பெரியார்:
தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?

ம.பொ.சி:
தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. “தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்” என்பது தான். இது “பரங்கி மொழிப் பைத்தியம்” அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே! அறியார் போலும்.

3.(மூன்று)

பெரியார்:
மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? இதற்கு ஆக தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் எதற்காக? எனக்குப் புரியவில்லை?

ம.பொ.சி:
இதனை வாதத்திற்காக ஒப்புக் கொள்வதானால், ‘ஆங்கில மொழியில் தான் அறிவு இருக்கிறது,’ ‘விஞ்ஞானம் ஒளி விடுகிறது’ என்று சொல்வதெல்லாம் மூடத்தனம் தானே? ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிப்பதற்கு அதிகமாக மொழியில் ஒன்றும் இல்லை என்றால், நமது வீட்டு மொழியான தமிழிலேயே உயர்தரக் கல்வி கற்பித்து, அந்த இடத்தில் ஆங்கிலத்தைக் கைவிடலாமே? இதனைப் பெரியார் ஏற்பாரா?

4.(நான்கு)

பெரியார்:
நம் நாட்டை விட்டு நாம் வேறு எந்த நாட்டுக்குப் போனாலும் நம் தாய்மொழி நமக்குப் பயன்படாதே!

ம.பொ.சி:
இது உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டாருக்கும் உள்ள பொதுப் பிரச்சினை. தமிழ்நாட்டாருக்கு மட்டுமுள்ள தனிப் பிரச்னையல்லவே! ஆங்கில மொழி மட்டும் அயல் நாடுகள் அனைத்திலும் வழங்கும் உலக மொழியா? இல்லையே!

உலக நாடுகளின் ஜனத்தொகை 290 கோடியாக இருக்க (1960 கணக்குப்படி) அதில் 26 கோடி பேர் தானே ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்? அந்த ஆங்கிலேயர் கூட, சீனாவுக்குப் போனால் அந்த நாட்டு மக்களோடு தங்கள் ஆங்கில மொழியின் மூலம் பேசிப் பழக முடியாதே!

தமிழன் ஆங்கில நாடுகளுக்குச் செல்வதற்காகவேனும் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை பரங்கி மொழி பயில வேண்டுமென்றால், அப்புறம் சீனாவுக்கு செல்வதற்காகச் சீன மொழியையும், ருஷ்யாவுக்குச் செல்வதற்காக ருஷ்ய மொழியையும் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை பயில வேண்டாமா?

ஆம், உலகம் என்பது ஆங்கில மொழிக்குரிய 26 கோடி மக்களைக் கொண்ட ஐந்து நாடுகள் மட்டுமல்லவே! அதற்கப்பால் தானே மிகப் பெரிய உலகம் இருக்கிறது

5.(ஐந்து)

பெரியார்:
தாய்ப்பாலைக் குடிக்க வேண்டும் தாய்ப் பாலுக்கு வகை செய்ய வேண்டும் (அதாவது சமஸ்கிருதம் கட்டாயமாக வேண்டும்) என்று வரட்டுக் கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பனாவது புட்டிப்பால் (இங்கிலீஷ்) வேண்டாம் என்று தள்ளுகிறானா? சொல்லுகிறானா?

ம.பொ.சி:
நான் மட்டுமென்ன, ஆங்கிலமே படிக்கக் கூடாதென்றா கூறுகிறேன்? இல்லையே! உயர் நிலைப் பள்ளி தொடங்கி கல்லூரிப் படிப்பு முடியும் வரை ஆங்கில மொழியைக் கட்டாயப் பாடமாக்குவதையும் வரவேற்கிறேன் என்பதைப் பெரியார் மறந்தார் போலும்! பாலுக்குச் சர்க்கரை போல, தமிழன் வாழ்வுக்கு ஆங்கிலம் பயன்படுவதை நான் வரவேற்கிறேன் என்பதை இப்போதேனும் பெரியார் தெரிந்து கொள்ள வேண்டும்

6.(ஆறு)

பெரியார்:
நண்பர் சிவஞானம் கூறும் தமிழ்த்தாய் உண்ட உணவெல்லாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பஞ்சகாவியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பாரதம், இராமாயணம், பாகவதம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய இவைகள் தானே. இவைகளில் தயை இருக்கலாம் அழகிருக்கலாம். பக்தி இருக்கலாம். முன்னேற்றத்துக்கான அறிவு இருக்கிறதா?

ம.பொ.சி:
கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் அறிவு பெற்று வந்ததெல்லாம் இந்த இலக்கியக் கருவூலங்கள் மூலம் தான் என்பது என் கருத்து. இந்த இலக்கியங்கள் தோன்ற வில்லையானால் உலகில் நம்மை மதிப்பாரில்லை. ஆனால், முழு நாத்திகரான ஈ.வெ.ரா. இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அது எப்படி இருப்பினும் தமிழில் நவீன விஞ்ஞான அறிவை வளர்க்கும் நூல்கள் இல்லை என்பதை நான் மறுக்க வில்லை. அதற்குக் காரணம் தமிழின் திறமையின்மையல்ல. ஆங்கில மொழியின் ஆதிக்கம் இதற்கு காரணம். அத்தகைய நூல்கள் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தான் கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழியாக்க வேண்டும் என்று போராடி வருகிறேன்.
அதற்கெனவே தனி இயக்கம் கொண்டு நடத்தியும் வருகிறேன்.

பாட்டும், தொகையும், பஞ்ச காவியங்களும், இதிகாச புராணங்களுமே போதும் என்று நான் சொல்ல வில்லை. அப்படிச் சொல்வதனால் பல்கலைக் கழகம் லேண்டாம். விஞ்ஞானப் படிப்பே தேவை இல்லை என்றல்லவா நான் சொல்ல வேண்டும். அப்படி நான் சொல்ல வில்லையே,

தமிழில் விஞ்ஞான நூற்கள் தேவை. தமிழர் விஞ்ஞானம் பயில வேண்டியதும் அவசியம் என்று நான் எண்ணுவதால் தான் உயர்தரக் கல்வி தமிழின் மூலமே போதிக்கப்பட வேண்டும் என்று போராடுகின்றேன்.

7.(ஏழு)

பெரியார் :
தமிழின் மூலம் மூடநம்பிக்கை தானே வளர்க்கப்பட்டது?

ம.பொ.சி:
ஆங்கில மொழியும், ஆங்கிலம் பயின்ற தமிழர்களும் கூட இந்த குற்றச்சாட்டுகளுக்கு விலக்கல்லவே. தமிழே பயிலாத தமிழிலுள்ள புராண இதிகாசங்களைத் தன் கரத்தாலும் தீண்டியறியாத டாக்டர் ஏ.எல்.முதலியார், ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவை ஏற்றுக்கொண்டவரா? நெற்றியில் நாமமிட்டு நாராயணனைப் பஜனை செய்பவராயிற்றே!

ஆங்கிலம் பயின்று பி.ஏ. பி.எல். பட்டம் பெற்ற டாக்டர் பி.டி.ராசன் பக்தி மதத்திற்குப் புறம்பானவரா? ஐயப்பன் சிலையைத் தலையில் சுமந்து கொண்டு அவனி முழுதும் பவனி வருபவராயிற்றே!
ஆங்கில மொழி பயின்று பட்டம் பெறாத ஈ.வெ.ரா.வைப் போல சீர்திருத்தப் புரட்சியாளர் ஆங்கில மொழி பயின்றவர்களிலே ஒருவரைக் கூட நான் கண்டதில்லையே.

ஆகவே பரங்கிமொழிப் படிப்பிற்கும், பகுத்தறிவு இயக்கத்திற்கும் கொஞ்சங் கூட சம்பந்தமில்லை என்பதை ஈ.வெ.ரா. உணர வேண்டும்.

@Kathir nilavan

இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்தும் பேசிய பெரியார்

இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்தும் பேசிய பெரியார்

இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்துப் பேசிய பெரியார்

வாலசா வல்லவனுக்கு மறுப்பு!
( வாலாசா வல்லவன் )

திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் திருக்குறளை பெரியார் மலத்தோடு ஒப்பிட்டதாக சீமான் பேசியுள்ளார். அதற்கு சான்று காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

நானும் சான்றோடு ஐயா ஆனைமுத்து தொகுத்த “ஈ.வெரா. சிந்தனை தொகுப்புகள்” நூலிலிருந்து வெளியிட்டேன். அதை மறுக்க முடியாத திராவிட சொம்பு வாலாசா வல்லவன் பெரியார் எழுதியவை முழுமையாக இல்லை என்றார்.

நான் முழுமையின் சுருக்கத்தை தெளிவாகவே எழுதியுள்ளேன். பின்வருமாறு:

பெரியார் திருக்குறளை மலத்தோடு
ஒப்பிட்டார். ஆதாரம் இதோ….

பெரியாரியவாதிகள் பலரும் பெரியார் மலத்தோடு ஒப்பிட்டு கூறியதை மறுத்து வருகின்றனர்.

பெரியார் பேசினார் என்பதற்கு ஐயா ஆனைமுத்து தொகுத்த ஈ.வெ.ரா. சிந்தனைகள் , ( தொகுதி 2, பக்கம் 1259 ) புத்தகம் சான்றாக உள்ளது. ஐயா ஆனை முத்து அமைப்பில் இருக்கக்கூடிய தோழர் வாலசா வல்வவன் அவர்களே இதனை மறுப்பதுதான் பெரிய வேடிக்கையாக உள்ளது.

“வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது ? என்று பதில் கூறினேன்.”

பெரியாரின் இந்த பேச்சு என்பது திருக்குறளை பெரியார் ஏற்றுக் கொண்ட பின்னர் அவரே கூறிய ஒரு செய்தியாகும். எனவே இதனை கடந்த காலத்தில் அவர் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெரியாரியவாதிகள் வாதிடுகின்றனர்.

கடந்த காலத்தில் அவர் பேசியிருந்தாலும் அவரின் உள்ளக்கிடக்கை தானே அதில் வெளிப்படுகிறது. திருக்குறளை ஏற்றுக் கொண்ட பின்னர் அதனை சொல்ல வேண்டிய அவசியமில்லையே? இப்படி பேசியதற்காக துளியுண்டு வருத்தம் கூட அந்த உரையில் தெரிவிக்காதது ஏன்?

பரிமேலழகர் உரையை படித்ததால் திருக்குறளை மறுத்து வந்ததாகக் கூறும் பெரியார் பலரின் உரையை படித்த பிறகு தன் நிலையை மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கிறார். உண்மை அதுவெனில், திருக்குறளை ஆதரிக்கும் நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் கடுமையாக மறுக்கும் நிலைக்குச் சென்றதேன்?

திருக்குறளை மலத்திற்குச் சமமாக நினைக்கும் புத்திதான் திரும்ப திரும்ப அவரின் வாழ்வின் இறுதி காலத்திலும் ஆட்டிப் படைத்திருக்கிறது.

இல்லையென்றால் அண்ணா ஆட்சி காலத்தில் கடவுள் படத்தோடு சேர்த்து வள்ளுவர் படத்தை அகற்றச் சொல்லியிருப்பாரா?

“நான் ஒருவன் தான் திருக்குறளை எதிர்த்தேன் ” (27.12.1972 கலைமகள் இதழ் பேட்டி)

-என்று வாழ்வின் இறுதிக் காலத்தில் கூறுகிறார். பெரியார் இப்படி சவால் விட்டுச் சொல்வதை திறனாய்வு என்று எப்படிச் சொல்ல முடியும்? இது திருக்குறளின் மீதான வன்மத்தை தானே வெளிக் காட்டுகிறது.”

இதற்கு மேல் திராவிட சொம்பு வாலாசா வல்லவனுக்கு என்ன பதில் வேண்டும்?

பெரியார் (1950க்கு ) முன்பு திருக்குறளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூலாக கருதியதையும் மலத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறியதையும் திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எப்படி கருதுகிறார்?

கடந்த காலத்தில் பேசியது தவறு என்று சொல்ல அவரின் முரட்டு பெரியார் பக்தியானது இடம் தரவில்லையோ?

அதே கட்டுரையில் , பரிமேலழகர் உரையை தவறு என்று அறிவாளிகள் கூறியதால் திருக்குறளை ஆதரிக்க முன் வந்தேன் என்று கூறும் பெரியார் திருக்குறளின் மேன்மை குறித்து விரிவாகத் தெரிவிக்கிறார்.

இதைப் படித்து விட்டு திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் பெரியார் திருக்குறளை ஆதரித்துப் பேசியதை நான் வெட்டி விட்டதாக ஆதங்கப்படுகிறார்.

ஆனால் உண்மை என்னவெனில், திருக்குறள் எதிர்ப்பு – ஆதரவு- எதிர்ப்பு என்று மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் பெரியார் குறித்து விமர்சிக்காமல், தனக்குத் தேவையானதை மட்டும் வெட்டி எடுத்துப் பேசுவதுதான் திராவிட சொம்பு வாலசா வல்லவனுடைய வேலையாகும்.

கால வரிசைப்படிப் திருக்குறள் குறித்து பெரியார் என்ன பேசினார் என்பதை திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எழுதத் தயாரா?

முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் பெரியார் என்பதுதான் எனது நிலைப்பாடு. இதைச் சொன்னால் வாலாசா வல்லவன் போன்ற பெரியாரின் முரட்டுப் பக்தர்களுக்கு கோபம் வருகிறது.

திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்.

ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய எதிர்ப்பு’ என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய ஆதரவு’ என்பார்.

தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை.

இவர் 1949இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதை பெருமை பொங்க பேசுபவர்கள் கடந்த காலத்தில் திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டுக் கூறியதைக் கண்டு சினம் கொள்ள மாட்டார்கள்.

திருக்குறள் குறித்து பெரியாரின் ஆதரவு நிலைப்பாட்டை முதலில் காண்போம்.

14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில், “திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு, திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்”

ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில், “குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்” என்றும் கூறுகிறார்.

15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், “குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்” என்றும் பேசினார்.

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.

அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”

(பக். 169)

மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.

பரிமேலழகர் உரையை மறுத்து அறிவாளிகள் கூறியதை ஏற்கும் நிலைக்கு தாம் வந்ததாக அவர் வெளியில் சொல்லிக் கொண்டு வந்த நிலையில் மீண்டும் வேதாளம் போல முருங்கை மரம் ஏறி திருக்குறளை தாக்கத் தொடங்கினார்.

தமது 90வது பிறந்த நாள் கட்டுரையில் எழுதுகிறார்:
தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் தமிழர்களால், தமிழ்ப்புலவர்களால் போற்றப்படுகிறவர்களில் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள். அவர்கள் யார் என்றால், 1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார்.

இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள். வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன் படுத்தினான் என்று சொல்வதற்கில்லை.

அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப் பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.

….தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன் அல்லது எந்த இவற்றிற்கு உயிர், செலாவணி, இருக்கும்வரை தமிழனுக்கு மானம், அறிவு, இன உணர்ச்சி ஏற்படமுடியுமா? ஏற்படுத்த முடியுமா? என்று கேட்கிறேன்.

(பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர், 17.09.1968)

அண்ணாவின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் (1968) தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எனும் நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. (தற்போது தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப் பட்டுள்ளது)

அதில் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால் ஏசப்பட்டனர். இம் மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள் என்றார்.

பெரியார் கூறுகிறார்: திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்.”

பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்:

“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”

திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின் முரண்பாடு கொண்டவை என்பதற்கு மேற்கண்ட அவரது முந்தைய பதிவுகளே அவரைத் தோலுரிக்கும்.

திருவள்ளுவருக்கு காவி உடை கட்டி சனாதனவாதியாக சித்தரிக்கும் சங்கிகளின் செயலுக்கும் , ஆரிய ஆதரவு நூல் என்று சொல்லும் பெரியாருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. திருவள்ளுவரை சங்கிகளின் பக்கம் தள்ளி விடும் வேலையைத் தான் பெரியார் இறுதிக் காலத்தில் செய்துள்ளார் என்பது வெள்ளிடை மலை.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர்.

அவர் எழுதிய திருக்குறள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போர்க்களத்தில் இன்றும் தேவைப்படுகிறது என்பதை பெரியாருக்கும், பெரியாருக்கு முட்டுக் கொடுக்கும் திராவிட சொம்பு வாலசா வல்லவன் போன்ற முரட்டுப் பக்தர்களுக்கும் ஓங்கி உரைத்திடுவோம்!

– கதிர் நிலவன்