தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967

தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967

சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள்

18.7.1967

தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மான நாள்

18.7.1967

உண்மை வரலாறு!

(1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் மொழிவழித் தமிழ் நாடு உருவாக்கப்பட்ட நாளாகும்.

மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றவர்களின் போராட்டங்களால் அண்டைய தேசிய இனங்களால் பறிக்கப்பட்ட தமிழக எல்லைகள் ஓரளவு மீட்கப்பட்டன.

நவம்பர் 1ஆம் நாளை தமிழகப் பெருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசியர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இதற்கு ஏற்பு வழங்கப்பட்ட து. ஆனால் தற்போதைய ஸ்டாலின் ஆட்சியில் “தமிழ் நாடு நாள்” சூலை 18க்கு என்று மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிறந்த நாளை விட, தமிழ் நாடு பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவது தான் சிறப்பு என்று ஸ்டாலின் அரசு விளக்கம் தருவது ஏற்கத்தக்கதல்ல.

தமிழக எல்லை மீட்புப் போரில் திராவிட இயக்கம் தலைமை தாங்கிப் போராட வில்லை என்பதை உண்மையான வரலாறு படித்தோர் அறிவர்.

சூலை 18இல் தமிழ்நாடு பெயர் சூட்டியது அண்ணாவின் ஆட்சி என்பதால் வேறு நாளுக்கு மாற்றுவது என்பது எல்லை மீட்கப் போராடிய தலைவர்களின் ஈகத்தை மறைக்கின்ற முயற்சியாகும்.

குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவது தான் எல்லோரும் கடைபிடிக்கும் மரபு. குழந்தைக்குப் பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவதை அறிவார்ந்த செயலாக பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல; அது வரலாற்றை மறைக்கும் நோக்கம் கொண்டதாகவே கருதப்படும்.

தமிழ்நாடு பெயர் சூட்டிய வரலாறும் கூட திராவிட இயக்கத்திற்கே உரித்தான ஒன்றல்ல. திராவிடம் இயக்கத்தைச் சாராதவர்களும் மிக அதிகமாக பங்கு வகித்துள்ளனர். அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.)

தமிழ்நாடு பெயர் மாற்ற வரலாறு!
– கதிர் நிலவன்

1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டப் பிறகு, ஹைதராபாத்தும் இதரப் பகுதிகளும் சேர்ந்து ‘ஆந்திரப் பிரதேசம்’ என்றும் திருவிதாங்கூரும் இதரப் பகுதிகளும் சேர்ந்து ‘கேரளம்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், எஞ்சிய சென்னை மாகாணம் உள்ளிட்ட திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளோ 11 ஆண்டுகளாகியும் தமிழ்நாடாக மாறவில்லை.

இங்கு மொழிவழித் தேசிய உணர்வை ஊட்ட மறுத்த இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழர்களை விழிப்படைய செய்யாமல் தூங்க வைத்ததே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.

தமிழ்நாடு என்ற பெயர் எவர் ஒருவரோ முன்மொழிந்து தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பெயரல்ல. இது இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறு தொட்டு அழைக்கப்பட்டு வந்த பெயராகும்.

சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் தமிழகம், தமிழ்நாடு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

” வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுகம்” என்று தொல்காப்பியமும்

“தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம்” என்று பரிபாடலும்

“இமிழ் கடல் வேலி தமிழகம்” என்று பதிற்றுப்பத்தும்

“தென்தபிழ் நாடு” என்று சிலப்பதிகாரமும்

” சம்பூந் தீவினுள் தமிழக மருங்கில்” என்று மணிமேகலையும்

தமிழ் நிலம் குறித்த பெயர்களை குறிப்பிடுகின்றன.

பிரித்தானியரின் ஆட்சியில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாரும்

“நித்தம். தவம் செய்யும் குமரி எல்லை – வட மாலவன் குன்றம் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு” என்று தமிழகத்தின் எல்லையையும், பெயரையும் ஒருசேர குறிப்பிடுகிறார்.

பல்வேறு அந்நிய ஆட்சியாளர்களின் நுகத்தடியில் தமிழகம் சிக்குண்ட காரணத்தால் தமிழர் நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டமுடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.

பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்ட இந்திய மக்களிடம் ஏற்பட்ட மொழிவழி உணர்ச்சியும், மொழிவழி மாநிலக் கிளர்ச்சியுமே தத்தமது இனத்தின் நிலப்பெயர்கள் சூட்டும் நிலையை உருவாக்கியது.

தமிழகத்தில் 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாக “தமிழ்நாடு தமிழருக்கே” கோரிக்கை எழுப்பப்பட்ட போதிலும் அது தொடர்ந்து வலுப்பெறவில்லை. அது வெற்றி பெற்றிருந்தால் ” தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

அந்தப் போராட்டம் திராவிட இயக்கத்தவர்கள் கைகளுக்கு சென்று திராவிட நாடாக திசை மாறிப் போனதால், தமிழ்நாடு என்ற பெயரைக்கூட சூட்ட முடியாமல் போனது.

1952இல் ஆந்திரர்கள் விசால ஆந்திரம் கோரிக்கையை தீவிரப்படுத்தி போராடி வெற்றி பெற்றனர். அப்போது தான் தமிழர்கள் வாழும் நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு என்ற பெயரை சூட்டும் கோரிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது.

21.07.1953இல் காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ம.பொ.சி. அவர்கள் முதன் முறையாக இக் கோரிக்கையை எழுப்பி, “எஞ்சிய சென்னை மாகாணம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லப்படுகிறது. ஏன் அப்படியே இருக்க வேண்டும்? தமிழ் ராஜ்ஜியம் என்ற பெயர் வைக்கின்ற அளவுக்கு மற்ற தென் கன்னடம், மலையாள ஜில்லாக்களைப் பிரித்து இதை அமைத்தால் என்ன கெட்டுப் போய்விடும்?” என்று பேசினார்.

அதன் பிறகு 27.04.1954 இல் சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் பெண்ணாடத்தில் ஆட்சிமொழி மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் சட்ட மேலவை உறுப்பினர் அ. கசபதி நாயகர் தலைமை தாங்கிட, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழ்க்கொடி ஏற்றினார்.

அதில், “தமிழகத்திற்கு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும், ஆந்திரம் பிரிந்த சென்னையை” தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

அதேபோல் இச்சங்கம் 31.05.1954இல் திருநெல்வேலியில் நடத்திய மாநாட்டிலும் ” தமிழ்நாடு” பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1934இல் சென்னை மாகாண தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் தமிழறிஞர் கா.சு. பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

03.03.1955இல் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் சட்டமன்றத்தில் வரவு – செலவு அறிக்கை விவாதத்தில், இக்கோரிக்கையை ஆதரித்து “இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழா் ஆட்சி வந்துவிட்டதென்று வெளியே பேசப்படுகிறது. அதோடு பச்சைத் தமிழா் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பச்சைத் தமிழா்களுடைய ஆட்சியில் இந்த ராஜ்யம் தமிழ்ராஜ்யம் என்று அறிவிக்கப்பட வில்லையானால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

29.11.1955இல் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவில் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை – மெட்ராஸ் ஸ்டேட்” என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் ” என்று அழுத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக 1956 நவம்பர் 1இல் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தமிழர் பகுதிகளான தேவிகுளம், பீர்மேட்டை கேரளத்திற்கு வழங்கிய பசல் அலி ஆணையத்தைக் கண்டித்து ம.பொ.சி. அவர்கள் 27.01.1956இல் திரு. ஜி. உமாபதி (சென்னை மாவட்ட தமிழரசுக் கழகத் தலைவர்) வீட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் அண்ணா, இரா. நெடுஞ்செழியன் (தி.மு.க.), ம.பொ.சி, தி.க. சண்முகம், ஜி. உமாபதி, சின்ன அண்ணாமலை ( தமிழரசுக் கழகம்), ப. ஜீவானந்தம், மணலி கந்தசாமி (கம்யூனிஸ்ட் கட்சி), க.இரா. நல்லசிவம், எம். சின்னச்சாமி, ப.சு. சின்னத்துரை ( பிரஜா சோசலிஸ்ட் கட்சி) , சர்.பி.டி. இராசன் (ஜஸ்டிஸ் கட்சி), கே. விநாயகம் (வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுத் தலைவர்), பாவேந்தர் பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், நாரண துரைக்கண்ணன், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தலுக்கு இணங்க தமிழ்நாடு பெயர்மாற்ற கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், தமிழக எல்லைகளை மறு வரையறை செய்தல், தட்சண பிரதேச திட்டத்தை எதிர்த்தல், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 20.02.1956இல் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தை திராவிடர் கழகமும், காங்கிரசுக் கட்சியும் புறக்கணித்தன.

அப்போது காமராசர் தலைமையிலான காங்கிரசுக் கட்சி தமிழக எல்லைகளை மீட்பதிலும், தமிழ்நாடு பெயர் சூட்டுவதிலும் எதிரான நிலைப்பாட்டையே கடைபிடித்தது.

தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினால் வெளி நாட்டினரும், வட நாட்டினரும் புரிந்து கொள்ள முடியாது என்றும், “மெட்ராஸ் ஸ்டேட் ” என்று அழைத்தால் தான் வெளி உலகுக்கு தெரியும் என்றும் அது வாதிட்டது .

28.03.1956இல் சட்டமன்றத்தில் மாநிலங்கள் மறுசீரமைப்பு வரைவுத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய ப. ஜீவானந்தம் அவர்கள் “மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது இந்திய தேசம் சுக்குநூறாக உடைந்து விடாது” என்றும் “வளர்ந்து வரும் ஜனநாயகத்திற்கேற்ப சென்னை ராஜ்ஜியத்தை தமிழ் நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது?” என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நடைபெற்ற அக்கூட்டத் தொடரில் பங்கேற்ற எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. வேலு, சி. கந்தசாமி, ஏ. இரத்தினம், கே.ஆர். நல்லசிவம், கே. விநாயகம், கே.டி. இராஜீ ஆகியோரும் தமிழ்நாடு பெயரை உடனடியாக சூட்ட வேண்டும் என்று வாதிட்டனர்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், காங்கிரசு கட்சிக்குள்ளும் ஒரு கலகக்குரல் எழுந்தது.

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதி என்று அறியப்பட்ட க.பெ. சங்கரலிங்கனார் அவர்கள் 27.07.1956இல் விருதுநகரில் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். காங்கிரசு கட்சி அவரின் போராட்டத்தை கண்டுகொள்ள மறுத்தது.

காங்கிரசின் இந்தப்போக்கு குறித்து வேதனைப்பட்ட சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் தருவாயில், ஜனசக்தி துணையாசியர் ஐ. மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில் “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை” என்று எழுதினார். அவரை அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் சந்தித்து உண்ணாநிலையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவரோ உண்ணாநிலையை கைவிட மறுத்து 79ஆவது நாளில் உயிர் நீத்தார்.

1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பெயர் மாற்றம் ஒலித்த போதிலும், காங்கிரசு கட்சியே வெற்றி பெற்றது. முதன்முதலில் சட்டமன்றத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து சட்டமன்றத்தில் மட்டுமே வலியுறுத்தி பேசி வந்தனர்.

ஆனால், தமிழ்நாடு பெயர் மாற்றத்தை களப் போராட்டமாக விரிவுபடுத்திய பெருமை ம.பொ.சி. யையே சாரும்.

25.12.1960இல் சென்னை கோகலே மன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாட்டை முதன்முதலாக ம.பொ.சி. நடத்தினார். அந்த மாநாட்டிலே காந்தியார் நினைவு நாளில் 30.01.1961இல் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கழகம் சார்பில் சத்தியாகிரகப் போர் நடத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஊடகத்துறையின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. தமிழக ஏடுகளான தினத்தந்தி, தமிழ்நாடு, ஆனந்த விகடன், குமுதம், தினமலர் ஆகியவை தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. ஆனால் இந்து ஏடோ தமிழ்நாடு பெயர் மாற்றத்தினால் தேச ஒற்றுமை குலைந்து விடும் என்றும், மொழிச் சிறுபான்மையினருக்கு அச்சமூட்டும் என்றும் கடுமையாக எதிர்த்தது.

அது மட்டுமல்லாமல், தமிழ் மன்றங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சி மன்றங்களிலும் இதைப் போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டன. அப்போது காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசு அதனை கடுமையாக எதிர்த்ததோடு பெயர் மாற்றத் தீர்மானம் போட்ட உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவதாக மிரட்டல் விடுத்தது. இதனைக் கண்டித்து தினமணி, மெயில், இந்து போன்ற ஏடுகள் தலையங்கம் தீட்டின.

பிரபல நாடகப் பேராசிரியர் பம்மல் சம்மந்த முதலியார் அவர்களும் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விட்டார்.

1961சனவரி 30ஆம் நாள் தமிழரசுக் கழகம் போராட்டத்தை தொடங்கியது. சென்னை, காஞ்சி, குடந்தை, வேலூர், திருச்சி, மதுரை, நாகர்கோயில், பழனி, தூத்துக்குடி, காரைக்குடி, திருவள்ளூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்திய தமிழரசுக் கழகத் தலைவர்களாகிய நாடகக்கலைஞர் ஒளவை சண்முகம், கு.சா. கிருஷ்ண மூர்த்தி, கவிஞர் கா.மு. செரீப், கு.மா. பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஏ.பி. நாகராசன், கலைக் காவலர் எம்.ஏ. வேணு, புலவர் கீரன், கோ. கலிவரதன், நாடகக் கலைஞர்கள் உடையப்பா , அவரது மனைவி வீரலெட்சுமி உடையப்பா, திருமதி சரோஜினி நாராயணசாமி, “அருட்பா அரசி” குருவாயூர் பொன்னம்மாள் உள்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்றைக்கு சட்டமன்றத்தில் நுழைய முயன்ற காமராசரின் காரை மறித்தும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் தொடர்ந்து அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக மறியல் போராட்டம் என்று 18 நாட்கள் போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

ம.பொ.சி. போராட்டம் நடத்திய அதே நாளில்தான் பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். சின்னத்துரை அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி கொண்டுவந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவர் இந்த தீர்மானத்தை ஐந்து மாதங்களுக்கு முன்பே கொடுத்திருந்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் காங்கிரசு அரசு காலம் கடத்தி வந்தது. அன்றைய விவாத நாளிலும் ம.பொ.சி.யின் போராட்டத்தை காரணங்காட்டி தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

அன்றைக்கு ம.பொ.சி. நடத்திய மறியல் போராட்டமும் பிரஜா சோசலிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கொண்டு வந்த பெயர் மாற்றத் தீர்மானமும், அவருக்கு ஆதரவாக தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பும் காமராசர் அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

24.02.1961இல் நடந்த சட்டமன்ற விவாதத்திற்குப் பிறகு, சென்னை மாகாணம் இனிமேல் ஆங்கிலத்தில் “MADRAS STATE” என்றும், தமிழில் “தமிழ்நாடு” என்றும் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்று ஒரே பெயரில் மாற்றம் செய்வதற்கு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தும்படி தில்லி அரசைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக இப்படியொரு சமரசத்தை காங்கிரசு அரசு அன்றைக்கு மேற்கொண்டது.

அதன் பிறகு தமிழர்களின் விருப்பமான அரசியல் சட்டத் திருத்தக் குரலுக்கு தமிழரல்லாத ஒருவர் வலு சேர்த்தார். அவர் பெயர் பூபேஷ் குப்தா. அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலவை உறுப்பினர். 1962 ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற மேலவையில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான வரைவை அவர் தான் முதன் முதலில் கொண்டு வந்தார். இதற்கு சட்டமன்றத் தீர்மான ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதாகக் கூறி, பூபேஷ் குப்தாவின் தீர்மானம் நாடாளுமன்ற மேலவையில் நிராகரிக்கப்பட்டது.

1962ஆம் ஆண்டுத் தேர்தலிலும் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றதால் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவில்லையென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வந்தது.

1964ஆம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த இராம. அரங்கண்ணல் மீண்டும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தபோது “அது முடிந்தபோன விசயம்” என்று காங்கிரசு அரசு கை கழுவியது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராசர் அதிகம் பேச மாட்டார். ஆனால், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியத்தை தன்னுடைய குரலில் அதிகமாக பேச வைத்தார். சி. சுப்பிரமணியம் சாமர்த்தியமாக சில பதில்களை கூறுவதில் வல்லவர் ஆவார்.

அவர் கூறுகிறார்; “மெட்ராஸ் என்பது ஆங்கிலப் பதம். தமிழில் அதை மெட்ராஸ் என்று அழைக்காமல் சென்னை நகரம் என்று தானே அழைக்கிறோம். சென்னை நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஒருவரும் கூறவில்லையே?”
ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் இருக்கட்டும், தமிழில் தமிழ்நாடு இருக்கட்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.

1952 முதல் 1967 வரை தமிழகத்தில் ஆட்சி நடத்தியது மட்டுமல்லாமல், மொழிவழி மாநிலம் பிரிக்கப்படாத கால கட்டத்திலே , தமிழ்நாடு என்ற பெயரை கட்சியின் பெயரில் சுமந்து நின்ற காங்கிரசு கட்சி ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றக் கோரிக்கையை நிராகரித்ததன் மூலம் அது வரலாற்றில் தீராப் பழியை தேடிக் கொண்டது.

1967இல் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு சட்ட ஏற்பு வழங்கப்பட்டது.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.பொ.சி. சென்னை ராஜ்ஜியத்தியத்தின் பெயரை “தமிழ்நாடு” என பெயர் மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அண்ணாவோ நானே இதை அரசின் சார்பாக கொண்டு வருவதாக உறுதி கூறியவுடன் ம.பொ.சி. தீர்மானத்தை திரும்பப் பெற்றார்.

18.07.1967இல் அண்ணா அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினார். இத்தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 20.12.1968இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது

அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது காங்கிரசு கட்சி அப்போதும் அரைகுறை மனதோடுதான் இத்தீர்மானத்தை ஆதரித்தது.

பெரியார் தமிழ்நாடு பெயர் மாற்ற பிரச்னையில் குழம்பிய நிலையிலும், மற்றவரை குழப்பிய படியும் இருந்துள்ளார்.

1964ஆம் ஆண்டு சூலை 23ஆம் நாள் தி.மு.க. உறுப்பினர் இராம. அரங்கண்ணல் “தமிழ் நாடு” பெயர் மாற்றம் கோரி தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பெரியார் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை ஆதரிக்க வில்லை. இராம. அரங்கண்ணல் அவர்கள் தமது உரையில் பெரியாரை “இரண்டு கெட்டான்” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அது பின் வருமாறு:

“ஈரோட்டுப் பெரியாரைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஈரோட்டுப் பெரியாருக்கு நாங்கள் என்றைய தினமும் எங்களை ஆளாக்கியவர் என்பதால் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தினம் ஈரோட்டில் இருக்கிற எங்கள் பழைய தலைவர் இரண்டுங் கெட்டனாக இருந்து கொண்டிருக்கிறார். அதே பாதையில் தான் நம்முடைய தட்சிண மூர்த்தி கவுண்டர் அவர்கள் பதிலும் இங்கே இருந்தது. தமிழகம் வேண்டும் என்றும் சொன்னார். அதே சமயம் என் தீர்மானத்தையும் எதிர்த்தார்.

(தமிழ் நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும் – ஆசிரியர்: அ.பெரியார், பக்கம் 150)

பெரியாரை இராம.அரங்கண்ணல் இரண்டுங்கெட்டான் என்று சொன்னதில் தவறொன்றுமில்லை.

பெரியார் 11.20.1955இல் “தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் பிரிந்தபோன பின்பும்கூட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்கூட இருக்கக் கூடாது என்றும் பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சிசெய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழிக்கப் பார்க்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டி ஒரு அறிக்கை விட்டார்.

அதே பெரியார் தமிழ்நாடு பெயர் மாற்றம் வெற்றி பெற்றப் பிறகு 06.12.1968இல் விடுதலை தலையங்கத்தில், அண்ணாவின் முயற்சியை பாராட்டி விட்டு கூறுகிறார், “தமிழ் மக்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தினால் என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்து விட்டான் என்பதுபோல் இருக்கிறது. ஆசாமிக்கு கண் பொட்டைதான் என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பதுபோல் தோன்றுகிறது . . . அண்ணாதுரை நாடு என்பதாக பெயர் மாறினாலும் தமிழர்கள் அடிமை நாட்டில் அடிமையாக வாழ்வது மாற்ற மடையுமா? ” என்கிறார்.

தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராக பார்ப்பனர்களும் வடவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் என்று அன்றைக்கு கூறிவிட்டு, இன்றைக்கு பெயர் மாற்றத்தால் என்ன பயன் என்று கேட்பதன் மூலம் அவரும் பார்ப்பன – வடவர் சூழ்ச்சிக்கு பலியாகி விட்டாரோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்பதைக்கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்றுதான் அழைக்க வேண்டும் என்று இராசாசி அறிக்கை விட்டார். அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார்.

அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிடவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

ம.பொ.சி. அண்ணாவின் தீர்மானம் குறித்து ‘எனது போராட்டம்’ நூலில் கூறுகிறார் : “தீர்மானம் எதிர்ப்பின்றி பேரவைத் தலைவர் அறிவித்தபோது, முதல்வர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று கூற, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று உரக்க ஒலித்தனர். இப்படி, மும்முறை ஒலிக்கப்பட்டது. அப்போது என் உடம்பு சிலிர்த்தது.”

ஆம்! ஈகி சங்கரலிங்கனாரின் கனவு பலித்ததை எண்ணி சிலிர்க்காத தமிழர் எவரும் உண்டோ?

நன்றி :

1. தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும் – அ. பெரியார்

2. ஆட்சித் தமிழ்; ஒரு வரலாற்றுப் பார்வை – சு. வெங்கடேசன்

3. தமிழ்ப் பொழில் (இதழ்)

4. சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – ஜீவபாரதி

5. எனது போராட்டம் – ம.பொ.சிவஞானம்

6. தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு – கவிஞர் கருணானந்தம்

– கட்டுரை: கதிர் நிலவன்
Tamilthesiyan.wordpress.com

தமிழர் திருநாள் உருவானது எப்படி?

தமிழர் திருநாள் உருவானது எப்படி?

தமிழர் திருநாள் உருவானது எப்படி?
தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.

அது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் ஆவார்.

சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித் தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் ‘தமிழர் திருநாள்’ பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள் அண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும் ஆவார்கள்.
1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினை தோற்றுவித்து “உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்” என்றும், “தமிழ்த்தாயை தனியரசாள வையுங்கள் ” என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார்.

அவற்றை தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வாண்டிலிருந்தே தமிழர் திருநாள் விழா , தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத்திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார்.

அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி , தமிழின உணர்வை ஊட்டினார். தமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.
ஒவ்வொரு தமிழர் திருநாள் பெருவிழாவிலும் சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு பெயர் சூட்டுதல், தைத் திங்கள் மூன்றாம் நாளில் திருவள்ளுவர் திருநாளாக அறிவித்து விடுமுறை அளித்தல், சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் “ஆகாசவாணி” என்று கூறுவதை நிறுத்துதல், உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் திருமேனியில் பூணூல் அகற்றி, சமயக்குறிகள் நீக்கி திருக்குறள் ஏடும் எழுத்தாணியும் உடைய திருவுருவப் படத்தை திறந்து வழிபடல், தெருப் பெயரிலும் ஊர்ப்பெயரிலும் தமிழர்தம் பெயரிலும் தூய தமிழ்ப் பெயர் மட்டுமே வைத்தல் போன்ற எண்ணற்ற தமிழர் நலன் காக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அதேபோல் 1946இல் ம.பொ.சி. “தமிழரசு கழகம்” எனும் பெயரில் அமைப்பொன்றை தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும்.

சென்னை மட்டுமல்லாது தமிழர் வாழும் பிற பகுதிகளிலும், மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்கு தூண்டுகோலாகவும் தமிழரசு கழகம் விளங்கியது.

இந்திய விடுதலை நெருங்கி வந்த தருணத்தில் மிகத் தீவிரமாக தெலுங்கர்கள் விசாலா ஆந்திரா (சென்னை உட்பட) கேட்டும், மலையாளிகள் ஐக்கிய கேரளம் கேட்டும் போராடி வந்தனர். அப்போது ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக ‘தமிழர் திருநாள்’ விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில்,
“தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை யை உறுதி செய்வதாகும்.
சுய நிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோலல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலிய நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திரு நாளை நடத்த தொழிலாளர், மாணாக்கர் முதலிய யாவரும் முற்படவாராக. தமிழ் இனம் எழுவதாக!”

என்று அறைகூவல் தரப்பட்டது.
இந்த கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ப.சுப்பராயன், ப.ஜீவானந்தம், வ.ரா., கல்கி, பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் . டி.கே.சி., செங்கல்வராயன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும் பொதுச் செயலாளர் அண்ணாத் துரைக்கும் இந்த கூட்டறிக்கை நகல் அனுப்பபப்பட்டது.

இருவருமே பதில் தர மறுத்தனர்.
1947 சனவரி 14இல் அறிவித்த படி தமிழர் திரூநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது.

சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

அக்கூட்டத்தில் தில்லி அரசின் அரசியல் நிர்ணய சபை உடனடியாக மொழிவாரி நாடுகளை பிரிக்க வேண்டும் என்றும், ‘குமரி முதல் திருப்பதி’ வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கும் பிறகும் தமிழரசு கழகத்தோடு ஒத்துழைக்க மறுத்த திராவிடர்கழகம் தனியாக ‘திராவிடர் திருநாள்’ பெயரிலே விழா கொண்டாடத் தொடங்கியது.
பெரியாரிடமிருந்து தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாவும் கூட திராவிடர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும் இரண்டு விதமாகக் குழப்பத்தோடு பொங்கல் விழாவை நடத்தி வந்தார்.

ஆனால் பொங்கல் விழாவை பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறைப்பதற்கில்லை.
தற்போது வீரமணி தலைமையில் இயங்கங்கூடிய திராவிடர் கழகம் அதே பழைய முறையில் பொங்கல் விழாவை “திராவிடர் திருநாள்” என்று அறிவித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீம்பாக நடத்திக் கொண்டு வருகிறது. அதில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமும் உள்ளடக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசிய அமைப்புகள் வீரமணியாரின் தமிழின அடையாள மறுப்புச் செயலை வன்மையாக கண்டித்தும் கூட வீரமணியார் இன்னும் திருந்திட வில்லை.

இந்த ஆண்டும் “திராவிடர் திரு நாள்” கூத்தை அரங்கேற்ற உள்ளார். சென்ற ஆண்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் கொதித்தெழுந்து ” தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்று முழக்கமிட்டதைக் கூட வீரமணி மறந்து விட்டார் போலும்!

இவரின் திராவிடர் திருநாள் பட்டியலில் சல்லிக்கட்டுக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவை ஆந்திரர்களோ, கர்நாடகத்தினரோ, கேரளத்தினரோ, கொண்டாடாத போது “திராவிடர் திருநாள்” பெயரில் விழா எடுப்பது யாருக்காக என்று தெரிய வில்லை.
நவம்பர் 1ஆம் நாள் மொழி வழி அமைந்த நாளை கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகளும் அங்குள்ள அரசியல் இயக்கங்களும், வெகுமக்கள் பங்கேற்போடு கொண்டாடி வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் வீரமணி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்.

திராவிட மாடல் அரசு சூலை18 க்கு தமிழ் நாடு நாள் விழாவை மடை மாற்றம் செய்த போது மனம் குளிர்ந்து போனவர் கி.வீரமணி .

தமிழரல்லாதார் நலம் காக்கும் பொருட்டு தமிழக எல்லை மீட்புப் போரில் பங்கெடுக்க மறுத்ததோடு பொங்கல் விழாவினை ‘திராவிடர் திருநாள்’ என்று அன்று முதல் இன்று வரை திரிபுவாதம் செய்திடும் திராவிட இயக்கங்களின் நயவஞ்சகப் போக்கை தமிழர்கள் இப்போதாவது உணர முற்பட வேண்டும்.
இன்று தமிழர் திரு நாள் மட்டுமல்ல, திராவிட மயக்கத்திலிருந்து தமிழர் அனைவரும் விழித்துக் கொள்ளும் நாளும் கூட!

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
(தகவல்: ம.பொ.சி. எழுதிய ‘எனது போராட்டம்’ நூலிலிருந்து.)

திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்! -பாவாணர்

திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்!
– தேவ நேயப் பாவாணர் (1959)

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது “மொழி பெயர் தேயம்” என்றனர் முன்னோர்.

“மொழி பெயர் தேசத்தாயிராயினும்” என்பது குறுந்தொகை (11). தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி – த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்)

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் “த்ராவிட சாஸ்த்ரம்” எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, ‘நான் தமிழன்’ என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) ” தமிழ் வேறு, திராவிடன் வேறு” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய ” தமிழர் நாடு” (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் “தென் ஆசியச் செய்தி” ஏட்டில் (மார்ச் 16-31, 2016) வெளி வந்தது.)

மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.

ஈ.வெ.ரா. மொழித் துறையில் வெறும் இராமசாமிதான்!
-பெருஞ்சித்திரனார்

பெரியார் ஒரு தமிழ் மொழி எதிர்ப்பாளர் என்று கூறினால் பெரும்பாலான பெரியாரியாவாதிகள் இக்கூற்றை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இக்கூற்றை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஏற்றுக் கொண்டு “பெரியார் மொழித் துறையில் வெறும் இராமசாமி” என்று கூறியுள்ளார். பெரியாரை சீர்திருத்தவாதியாக ஒப்புக் கொள்ளும் பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் தமிழ்மொழியை இழிவாகப் பேசிவந்த பெரியாரை கடுமையாக கண்டித்து
தமது ஏடான தென்மொழியில் எழுதினார்.

1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி” எனும் தலைப்பிட்டு பெருஞ்சித்திரனார் ஒரு கட்டுரை தீட்டினார். அது காலத்தை கடந்து இப்போது புதிதாக எழுதப்பட்டதைப் போல தோற்றம் அளிக்கிறது. இக்காலத்தில் பெரியார் குறித்த மதிப்பீடுகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பெரியார் பிம்பம் உடைக்கப்பட்டு வருவதை நாம்அறிவோம்.

ஆனால் இதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பெருஞ்சித்திரனார் தமக்கே உரிய நடையில் பெரியாரை காயப்படுத்தாமலே விளாசித் தள்ளியிருப்பது வியப்பைத் தருகிறது.

பெரியார் தமது மதிப்பை தமிழ் எதிர்ப்பின் மூலம் இழந்து விட வேண்டாம் என்று பெருஞ்சித்திரனார் கேட்டுக் கொண்டும் பெரியார் தன்னை திருத்திக் கொள்ள வில்லை. ஒரு கூலிப் புலவரை எழுத வைத்து தமது தமிழ் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். “தமிழ் மொழி ஒருகாட்டுமிராண்டி மொழி” என்று பெரியார் திரும்பத் திரும்ப கூறிவந்த நிலையில், பெருஞ்சித்திரனார் “தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியே” (தென்மொழி, அக்டோபர், 1967) என்று தலைப்பிட்டு மீண்டுமொரு கட்டுரை மூலம் பதிலடி தந்தார். ஆனாலும் பெரியார் சாகும்வரையிலும் தமிழ் எதிர்ப்பை கைவிடவில்லை என்பதே உண்மை.

பின்வரும் பெருஞ்சித்திரனார் எழுதிய “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி” எனும் விரிவான கட்டுரையை படித்துப் பார்த்தாவது பெரியாரியவாதிகள் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி!

கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று “விடுதலை” யில் ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம். அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றி யுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.

அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி, அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துளளதாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.

இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ , அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.

ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம். அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.

தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். பக்தவத்சலம் ஆரிய அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ, அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்…..

ஈ.வே.இரா. தமிழர்களின் தன்மான உணர்விற்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் பாடுபட்ட வகையில் போற்றப்பட வேண்டியவர்; புகழப்பட வேண்டியவர்;
ஆனால், தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இவர் அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்திருக்கின்றார். ஆரியப் பார்ப்பனர்களின் தில்லுமுல்லுகளையும் , அவரால் தமிழுக்கு நேர்ந்த- நேரவிருக்கின்ற கேடுகளையும் புடைத்துத் தூற்றி எடுத்துக் காண்பிக்கும் மதுகை படைத்த இவர், ஆரிய மொழியால் தமிழ் மொழிக்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நேர்ந்த தீங்கை ஒப்புக் கொள்வதில்லை; ஒரோவொருகால் ஒப்புக் கொண்டாலும் அதை விலக்க எவ்வகை முயற்சியும் செய்வதில்லை; ஒரோவொருகால் செய்தாலும் அதைக் கடனுக்காகவே, அவருடன் சேர்ந்திருந்த உண்மைத் தமிழன்பர் தம் கண்துடைப்புக்காகவே செய்திருக்கின்றார்.

பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார். இவரோ “பண உதவி ஏதும் செய்ய முடியாது; வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்; நான் விற்றுத் தருகின்றேன்.” என்று கூறினாராம். பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம். பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.

பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசிக் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம். அவர்களை நாமும் பாராட்டுவதில்லை . அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான். ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?

உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ? ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?

உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால், இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்?

பாவாணர், பாரதிதாசன் போன்றவர்களையும் இவர் கண்ட சேசாசலம், முத்துச்சாமி, சங்கரதாசு, கதிரைவேல் போன்றவர்களாகவே கருதிக் கொண்டாரோ? இல்லை, தாம் என்ன என்னவற்றை அறிந்திருக்கின்றாறோ அல்லது தமக்கு எவை எவை புரிகின்றனவோ அவையவை மட்டுந்தாம் அறிவுக்குப் பொருந்தியவை; சிறந்தவை; உலகமெல்லாம் பின்பற்றத் தக்கவை என்று கருதிக் கொண்டாரோ?

தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை. தமிழிலும் அதில் உள்ள மேலான உளவாழ்விற்கு அடிகோலும் நூல்களிலும் இவர் எதை எதைத் தேடுகின்றாரோ? நமக்குத் தெரியவில்லை.

ஆரிய அடிமைப் புலவர்கள் சிலர் இடைக்காலத்தில் ஆக்கி வைத்த கம்ப இராமாயணம், பெரிய புராணம், வில்லி பாரதம் முதலிய பார்ப்பன அடிமைப் பழங்கதை நூல்களே தமிழ் என்று நினைத்தால் தமிழ்மொழியில் மாந்தவாழ்விற்கான இலக்கிய நூல்களே இல்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் இப்பொழுதுள்ள கழக நூற்களையும், இறந்துபட்ட ஆயிரக்கணக்கான மெய்யிலக்கியங்களையும் கண்டும், கேட்டும், உணர்த்தும் கூட இவர் தமிழைப் பழிப்பதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமானால் தமிழ்மொழியில் என்னென்ன இல்லை என்று இவர் கூறட்டும்; அதன்பின் நாம் என்னென்ன இருக்கின்றது என்று காட்டுவோம்.

அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களில் உருசிய நாட்டின் இலெனினையும் ; மார்க்சையும்; கிரேக்க நாட்டின் சாக்ரடீசையும் எப்படி இவர் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? வேண்டுமானால் தொல்காப்பியரைப் போல், வள்ளுவரைப் போல், திருமூலரைப் போல் உலகில் உள்ள நாடுகளில் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று இவர் காட்டட்டும்! நாமும் இவர் கூறும் – இவர் விரும்பத்தக்க இவர் மதிக்கத்தக்க அறிஞர்களையும், பெரியோர்களையும் தமிழிலும் காட்டுவோம்.

பொதுமக்களின் உணர்வுகளை இவர் நன்கு உணர்ந்தவர் என்பதாலேயே, அறிஞர்களின் அறிவை இவர் நன்கு உணர்ந்தவர் ஆகி விடார். இவரின் கடவுள் வெறுப்புக் கொள்கை இந்நாட்டுச் சூழலில் இவர் கூறும் சீர்திருத்தத்திற்குச் சிறு அளவிலோ, பேரளவிலோ ஒருவாறு பொருந்துவதாகலாம். ஆனால் அதுவே மாந்தர்க்கு வேண்டிய நிறைவான கொள்கையாகி விடாது. குமுகாய குப்பைக் குழிகளில் இவர் எண்ணத்திற்கும் கருத்திற்கும் சொற்களுக்கும் வேண்டிய தீனி நிறைய உண்டு. அதனாலேயே அறிவுக்கருவூலம் இவருக்குத் திறந்த கதவாகிவிடாது. ஆரியப் பார்ப்பனரின் கலவைக் கொள்கைகளுக்கு இவர் பெரியதொரு சம்மட்டியாகாலாம். அதனாலேயே தமிழர்களின் உள வளர்ச்சிக்கும் மீமிசை மாந்த வளர்ச்சிக்கும் இவர் ஏணியாகி விடமுடியாது.

இவர் சீர்திருத்தம் பாராட்டக் கூடியது; பொதுமைக் கருத்து வரவேற்கக் கூடியது; துணிவு வியக்கக் கூடியது; முயற்சி போற்றக் கூடியது; அதனாலேயே இவருடைய அறிவும் பின்பற்றத்தக்கதாகி விடாது. முட்செடிகளை அகற்றி மலர்ச்செடிகளை வளர்க்கப் பாடுபடும் ஒருவன் நல்ல தோட்டக்காரனாகலாம். அதனால் அவன் அந்த மலர்ச் செடிகளையே படைத்தவன் ஆகிவிடமுடியாது. அதில் மலரும் மலர்களுக்குக் கட்டளையிடவும் முடியாது.
இவருடைய சீர்திருத்தத்தை – முயற்சியை – தொண்டைக் கொண்டு- மக்கள் இவரைப் பாராட்டுவதைக் கண்டு, அம்மக்கள் எல்லாரும் தம்மையே மீமிசை மாந்தனாகக் கருதிக் கொண்டுள்ளனர் என்று இவர் தவறாக எண்ணிக் கொண்டார் போலும்; அப்படி எண்ணி இவருக்குத் தொடர்பில்லாத செய்திகளில் – மெய்யறிவுணர்வுகளில் இவர் கருத்தறிவிப்பது இவர் பேதைத் தன்மையையே காட்டும்.

தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள புகுத்தப்பட்டுள்ள இடைக்காலக் கருத்துகளைப்பற்றி ஆராய்ந்து, அக்கருத்துகள் யாவும் பிறரால் இம்மொழி பேசிய மக்களை ஏமாற்றுவதன் பொருட்டு எழுதி வைக்கப்பட்டதாகும் என்று தெரிந்த இவர், அப்பாழ்வினைக்குத் தமிழ் மொழி மேல் குற்றங்கூறுவது எப்படி சரியாகும்?
தமிழ் மக்களுக்கு ஒவ்வாத கருத்துகளை ஒதுக்கப் புகுந்த இவர் அக்கருத்துகளோடு தமிழர்களுக்கே உயிராகவிருந்த ஒழுகலாறு, மெய்யுணர்வு, உளத்தூய்மை முதலிய உயர்ந்த கொள்கைகளின் உள்ளுக்கங்களையும் ஒரேயடியாகத் துடைத்தெடுக்க முற்பட்டு விட்டார்.

ஆரியக் கடவுள் கொள்கைகளைச் சாடவந்த இவர் தமிழரின் ஒரு தெய்வக் கொள்கையையும் கண்டிக்க – கண்மூடித்தனமாக இவர் செய்த முயற்சி- ஆரிய அழுக்கை ஒருவாறு அகற்றியதேனும் , தமிழர் பண்பாட்டையுமன்றோ சிதைத்தெறிந்து விட்டது. இற்றைத் தமிழகத்தில் நிலவியிருக்கும் பண்பாட்டுத் தாழ்வுக்கு இவரும் இவர் மட்டையடிச் செய்கைகளும் கூட ஓரளவு காரணம் என்று கூறலாம்.
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது போல் தமிழகத்தில் வந்து கலந்த ஆரியரின் பல தெய்வக் கொள்கையை ஒழிக்கப் பாடுபட்டுப் பேய்த் தன்மையை வளர்க்கவே பயன்பட்டது இவரியக்கம் எனினும் மிகையில்லை.

இவ்வளவு அரும்பாடு பட்டும் இவர் எதிர்த்துப் போராடுகின்ற பார்ப்பனரின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தாமற் போனதற்கு , இவர் தமிழ் மேலும் தமிழ்ப் பண்பாட்டு மேலும் முழு நம்பிக்கை வைக்காமையே காரணம். எய்தவன் இருக்க அம்பை நோகும் இவர் செய்கைக்கு நாம் மிகவும் வருந்துகின்றோம்.

தமிழில் இதுவரை நல்ல நூல்கள் வெளிவரவில்லை என்று பழி சுமத்தும் இவர் , இவ்வுலகில் உள்ள எந்த மொழியில் வெளிவந்த எந்த நூல் தான் எந்தப்பகுதி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்தது என்று கூறுதற்கியலுமா?

உலகில் உள்ள நூல்கள் பலவகைப்பட்ட.ன. ஒரு தோட்டத்தில் உள்ள மலர்களைப் போல் பல்வகை மணங்களும் நிறங்களும் கொண்டன. அதில் மல்லிகை மலருக்கு , முளரி (ரோசா) மலரைப் போல் வண்ணமில்லையே என்றும் , மகிழ மலர் போல் மணமில்லையே என்றும் கூறிக் கொண்டிருப்பது பேதைத்தனமேயன்றி மலரில் உள்ள குறைபாடு ஆகாது.
தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் , சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும், புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் , மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் , அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் , திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும், திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.

இவையன்றி இக்கால அறிவியல் வளர்ச்சிக்குப் பொருந்தும் படியான நூல்கள் எவை எனின், இக்காலத்துச் செய்முறை அறிவு நூலை அக்காலத்திலேயே எப்படி எழுதி வைத்திருக்க முடியும்? என்றாலும் நம் தமிழில் உள்ள நூல்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட ஒரு நிலையில் நாம் இத்தகைய கேள்வியை இரக்க உணர்வோடு கேட்க வேண்டுமே யன்றி, இழிவுணர்வோடு கேட்பதும், தமிழையே காட்டு மிராண்டிக் காலத்து மொழி, நாகரிக காலத்திற்குப் – பகுத்தறிவுக் காலத்திற்குப் பொருந்தாத மொழி என்றும் இடித்துரைப்பதும் ஈ.வே.ரா.வின் பேதைமையையே காட்டும்.

அவர் கருதும் காட்டுமிராண்டித்தனம் என்பது என்ன? நாகரிகம் என்பது எது? பகுத்தறிவு என்பது எது? என்பதைக் தெளிவாகக் கூறட்டும். நாம் அதன்பின் அத்தகைய காட்டுமிராண்டித்தனம் தமிழில் என்ன இருக்கின்றது என்று கேட்போம். அவர் கூறும் நாகரிகமும் பகுத்தறிவும் எந்த நூலில் இல்லை என்று சூளுரைத்துக் கேட்போம்.

ஆரியர்களின் சூழ்ச்சியால் இற்றைக் காலத்துள்ள தமிழ் மக்கள் பெரும்பாலாரிடம் தமிழ் மானத்தையும், தமிழ் அறத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் எப்படிப் பார்க்க முடிவதில்லையோ , அப்படியே ஆரியரால் அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ள நூற்களிலும் நாம் முழுவதும் பாராட்டுகின்ற அளவிற்குத் தமிழ்த் தன்மைகளைப் பார்க்க முடியவில்லை என்பது உண்மையே! ஆனால் அதற்காகத் தமிழ் மொழியையே தாழ்த்திக் கூறுவது எப்படி அறிவுடைமையாகும் .

சீதையின் கற்பாராய்ச்சியையும் இராமனின் கோழைக் கண்டு பிடிப்பையும் ஆரிய தெய்வங்களின் இழிநிலை ஆய்வுகளையும் செய்வதில் “வல்லவர்” என்பதாலேயே , இவர் தமிழ் மொழி ஆராய்ச்சியையும் செய்வதில் வல்லவராகி விடமாட்டார்.

கால்டுவேலரும் , போப்பும் , பெசுக்கியும் , சார்லசு கோவரும் , எலிசா ஊலும் , சான்முர்தோக்கும் , செசுப் பெர்சனும் , கிரையர்சனும் , பெரடெரிக் பின்காட்டும் , கிரேயலும் ,எமினோவும் , பரோவும் , சேம்சு ஆலனும், மறைமலையடிகளும் , திரு.வி.க.வும் , பாவாணரும் தெரிந்து கொண்டவற்றை விடப் பெரியார் ஈ.வே.இரா. தமிழைப் பற்றி மிகுதியாகத் தெரிந்து கொண்டு விட்டார் என்று நாம் கருதிவிட வேண்டா.

அவர் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வே.இரா. மட்டும் தான். உலக அறிவியல் கழகத்தின் தமிழ் ஆய்வியல் பேராசிரியர் பெரியார் அல்லர்; என்பதைத் தமிழன்பரும் பிறரும் உணர்ந்து கொள்வாராக. எனவே அவர் பட்ட ( அநுபவ) அறிவில் கண்ட உண்மையே தமிழ் என்னும் காரண அறிவுக்கு முடிவாகி விட முடியாது.

இவர் அரசியல்காரர்; அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ , வரலாற்றுப் பேராசிரியராகவோ, மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது. அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.

எனவே அவை அறிவுக்குத் தொடர்பில்லாத கருத்துகளே என்று கருதி விடுக்கவும். எவரும் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இவர் அரசியலைப் பொறுத்தவரை ஓர் இலெனினாக இருக்கலாம்; குமுகாயவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக இருக்கலாம்; பொருளியலைப் பொறுத்தவரையில் ஒரு மார்க்சாக இருக்கலாம்; சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு பெரியராகவும் இருக்கலாம்.

ஆனால் மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.

இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார் . இறைவன் உண்மையை மறுப்பதாலேயே இவர் முழுமையான அறிவாளாராகி விடமாட்டார்.

நெப்போலியன் ஒரு வீரமறவன் ; ஆனால் மனத்தூய்மையில் அவன் புத்தரைப்போல வழிபடத்தக்கவனல்லன். சாக்ரடீசு ஓர் அறிஞன்; ஆனால் அவன் இயேசுவைப் போல் பின்பற்றத்தக்கவனல்லன்; மார்க்சு பொதுவுடைமைத் தந்தை; ஆனால் வள்ளுவரைப்போல் மெய்யுணர்வினன் அல்லன்; சீசர் தன்னிகரற்ற ஓர் அரசியல் தலைவன்; ஆனால் அவன் எமர்சனைப் போல் மீமிசை உணர்வு படைத்தவன் அல்லன்; இலெனின் ஒரு நாட்டுக்கே புத்துணர்வூட்டிய வழிகாட்டி; ஆனால் அவன் ஐன்சுடீன் போன்ற அறிவியலறிஞன் அல்லன்;
அவர்களைப் போலவே ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்; பகுத்தறிவு வழிகாட்டி; அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். தமிழரின் குமுகாய அமைப்பைச் சீர்திருத்தியவர் என்பதற்காகத் தமிழையே சீர்திருத்தத் தொடங்குவது அவர் அறியாமையாகும்.

அது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவது போன்ற மடமைச் செயலாகும். பூச்சி அரித்த இலைகளையும், கிளைகளையும் கழிக்க முற்படுவதுடன் பரந்து வேரோடிய மரத்தையும் வெட்டிச் சிதைக்கும் ஓர் அடாத செயலாகும்.

அண்மையில் ஏப்பிரல் 22, 23, 24-ஆம் பக்கல்களில் இலண்டனில் சேக்சுபியர் பிறந்த நாளை அரசியல் பேரறிஞர்கள் உட்பட்ட எல்லாரும் கொண்டாடுவது, அவர் அறிவியல் அறிஞர், அல்லது நாட்டின் சீர்திருத்தக்காரர் அல்லது பகுத்தறிவு மேதை, அல்லது அந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் என்னும் காரணங்களுக்காகவா? அவர் ஒரு மொழிப் புலவர்; பாவலர் என்பதற்காகவே ஆகும். நம் நாட்டுப் பழம்பெரும் புலவர்கள் அவரைவிட எவ்வகையில் தாழ்ந்தவர்கள் என்பதைப் பெரியார் கூறட்டும்.

ஆரியர் சூழ்ச்சிகளால் இடைநாட்களில் ஏற்பட்ட சில்லறைப் புலவர்கள்
“புலவர்கள்” என்ற பெருமைக்குரியவர்களே அல்லர். எனவே அவர்களை நாம் பரிந்துரைக்கவும் இல்லை. இவர் மதிக்கின்ற மேலை நாடுகளில் அத்தகைய அளவுக்கு ஆண்டு தோறும் பெரும் புலவர்களுக்கு விழாவெடுத்துப் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இங்கோ தமிழர்களுக்கு விடுதலை தேடித்தருகின்றேன் என்று கூறும் ஒரு தலைவர், தமிழைப் பற்றியும், உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று; தமிழர் எல்லாருக்கும் வந்த இழிவாகும். தமிழ் நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம். உண்மைத் தமிழர்களுக்கு எள்ளளவும் மகிழ்ச்சி ஊட்டாது; மாறாக வெறுப்பையே ஊட்டும் என்று அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கருதிக் கொள்வார்களாக.

இவர் “தமிழ் படிப்பதால் பயன் ஒன்றுமில்லை” என்ற தம் கருத்துக்கு வலிவாக, எவனோ சொத்தை சோம்பேறிப் பாவலன் (!) ஒருவன் கூட்டி வைத்த உமிப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றுமில்லை யென்று ஊதிக்காட்டி அவனுடன் அவரும் அழுதிருப்பது அவர் அறிவுக்கு இழுக்கு என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறரை எப்படிக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்று இவர் கூறுகின்றாரோ, அப்படியே உண்மைத் தமிழர் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்று எச்சரிக்கின்றோம்.

தப்பித் தவறித் தன்மானம் கெடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரையே, மெய்ம்மைத் தமிழையே தாழ்த்தும் இப்படிப்பட்ட கருத்துரைகளால் , பெரியார் தமக்கிருக்கும் ‘பெரிய’ மதிப்பை இழந்துவிட வேண்டா என்று இவரை பல்லாற்றானும் கேட்டுக் கொள்கின்றோம்.

-பெருஞ்சித்திரன் .
நன்றி: தென்மொழி இதழ், ஏப்ரல் , 1967.

“முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாள் 19.12.1994

“முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவு நாள்
19.12.1994

1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல்

2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து “தமிழ்” என்று ஆயிற்று என்பது தமிழ் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக் காட்டாது-

3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் “திராவிட” என்ற சொல் ஒன்று கூட இல்லை.

4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.

5. 650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து “திராவிடம் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே!

7. “தமிழ்” என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் “ழ்” ஐ உடையது. (தம்+ழ்) என்பது பொருள். “திராவிடம்” என்ற வடசொல்லிற்கு குறுகிய விடம் என்றும் திராவிடர் என்ற சொல்லிற்கு குறுகியவர்-அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள்.( திராவி- அற்பம், குறுகல் )

8. தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும் – திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும்.

9. தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை.

10. தமிழ்நாடு , தமிழ் மொழி எனக் கூறலாம்- ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும்.

11. தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்து கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே “திராவிட நாடு” கூறப்பட்டதும் உண்டு..

12. தமிழ் என்றால் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ் தான், தமிழர் என்றால் திராவிடர் தான், திராவிடர் என்றாலும் தமிழர் தான், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு தான். திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடு தான் “அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது” என்பதில் புரட்டு இருக்குமே தவிர உண்மை இருக்காது.

13. தமிழர் என்று எழுதி (திராவிடர் ) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு ) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் ( தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் , திராவிட நாடு ( தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.

14. தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் “ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே” என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

15. தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க எழுதப்பேச, இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை.

16. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக, விலக பெருமையடைகிறது!

17. தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை.

18. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை.

19. “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது தமிழ்மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். “திராவிடநாடு திராவிடருக்கே” என்பதுவேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும்.

20. திராவிட நாட்டினர்களிற் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

21. திராவிட மக்களிற் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளுகிறவர் வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களே “அதுகள்; இதுகள்” என அஃறிணைப்படுத்தி வைதும் செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை, அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது.

22. 10 ஆண்டுகளாக திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9-உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால் அதை தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும்.

23. தமிழ் நாட்டிற்குள்ளாக திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை, தமிழ் நாட்டுப் பற்றை, வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கி, பாழ்படுத்துவதாக இருந்து வரும்.

24. காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர் தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டி விட வேண்டும்.

25. திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு “அடைந்தே தீருவேன் திராவிட நாடு” என்றால் அது இல்லாத ஊருக்கு, போகாத பாதையை, தெரியாத மனிதனிடம், புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும்.

26. அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும்.

27. அப்படியே ஒப்பினாலும் கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்-

28. அவ்விதமே முடிந்தாலும் அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாக தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.

29. தமிழ் வாழ்க என்று கூறி தமிழ்நாடு தமிழருக்கே என அலறி தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்ட திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி திராவிட கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி திராவிடர்க்கு போராட வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன? என்பதற்கு திராவிடம் இதுவரை பதிற்கூறவேயில்லை. தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.

30. தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டு தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும், சொல்லியும் வரலாற்றில் எழுதியும் கூட அவர் தன்னை கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும்.

இதுகாறுங் கூறியவைகளைக் கண்டு
தமிழ் எது? திராவிடம் எது?
தமிழர் யார்? திராவிடர் யார்?
தமிழ்நாடு எது? திராவிட நாடு எது?
தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது?
என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம்.

நன்றி:”,தமிழர் நாடு” இதழ், 1 மார்கழி 1980 (16.12.1949)
பேரா.கோ.வீரமணி தொகுத்த “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து.

– கதிர் நிலவன்
Tamilthesiyan.wordpress.com

தமிழக எல்லை மீட்புப் போராளி கா.மு.செரீப்

தமிழக எல்லை மீட்புப் போராளி கா.மு.செரீப்

தமிழக எல்லை மீட்புப் போராளி
கவி கா.மு.செரீப்
நினைவு நாள் 7.7.1994

(திரைப்படப் பாடலாசிரியர் என்று மட்டுமே அறியப்பட்டவர் கவி.கா.மு.செரீப். அவர் தமிழ்மொழி மீதும், தமிழினத்தின் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் வைத்திருந்த பற்றை பலரும் சொல்வதில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டு எல்லைகளை ஆந்திரர், கன்னடர், கேரளர் ஆகிய இனத்தவரிடமிருந்து மீட்டெடுக்க தமிழரசுக் கழகத்தோடு இணைந்து தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

இதற்காகவே சாட்டை (இதழ்) எடுத்து தமிழின உணர்ச்சியை பாடல்கள் மூலம் தட்டியெழுப்பியவர். இது குறித்து அவர் தொகுத்து எழுதிய ”களப்பாட்டு’ நூலில் முன்னுரையில் எழுதியதை அப்படியே தருகிறோம்.)

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் எந்த மாநிலமும் தனி ஒரு மொழியினைக் கொண்டதாயில்லை. எல்லா மாநிலங்களிலுமே ஆங்கிலம்தான் ஆட்சிமொழி, பயிற்சி மொழி, நீதிமொழி, நிர்வாக மொழி!

இன்றைய இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலமொழியே ஆட்சிமொழி. மாநிலங்களின் பெயர்களும்கூட மாநில மொழிகளின் பெயராலேயே உள்ளன. இவ்வாறாக அமைந்திட வேண்டும் என்பதே பழைய காங்கிரஸ் கொள்கை. காந்திஜி வகுத்தளித்த திட்டம். ஏனைய தேசியத் தலைவர்களெல்லாம் ஏற்றுக்கொண்டதுமாகும்.

சுதந்திரம் கிட்டியவுடன் மாநிலங்களின் புனரமைப்பிற்கான செயற்பாடுகளைத் தொடங்கினர்.

தமிழகத்தின் நிலைமட்டும் வேறுவிதமாயிருந்தது. இங்கேயுள்ள கட்சிகள் எது ஒன்றும் இப்பிரச்சினையில் அக்கறை காட்டிடவில்லை!

‘மதராஸ் மனதே’ என்றனர் ஆந்திரர். “காசர்க் கோடு முதல் கன்னியாகுமரி வரை தமதென்றனர் கேரளியர். ‘நீலகிரி மட்டுமின்றி கோயமுத்தூரும் தங்கட்கே” என்றார்கள் கன்னட நாட்டினர்.

தமிழர்க்குரிய பகுதிகளைக் காத்திடவோ கேட்டிடவோ எவரும் முன்வரவில்லை. “மதராஸ் மனதே” எனச் சென்னை நகரின் தெருக்களில் பேரணி நடத்தினர் ஆந்திரர். ‘தஞ்சை மாவட்டமும் மதுரை மாவட்டமும் எங்களவையே, அவை தெலுங்கர் ஆண்ட பகுதிகள் எனவும் பேசத் தொடங்கினர்.

ஆந்திர – கேரள – கன்னடக்காரர்களிடமிருந்து தமிழ் நாட்டை, தமிழ் நிலத்தைக் காத்திடவும், பறிபோய்விட்ட எல்லைகளை மீட்டிடவும் தமிழர்கட்கு ஓர் அமைப்பு தேவைப்பட்டது. தமிழர்க் கழகம் துவக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இணைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கு நூறெனத் தமிழர்கள் வாழுகின்ற அப்பகுதியைத் தமிழகத்துடன் இணைத்திட வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் கொதித்தெழுந்து கூறினர். அதற்கென அவர்கள் கண்ட அமைப்பு, ‘திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்!’. அதன் செயற்பாட்டினர் “தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்திட வேண்டும்” என இயக்கம் கண்டனர்.

திருப்பதி முதல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைத்திட வேண்டும் என்பதற்கு அங்குள்ள தமிழர்கள் இயக்கம் துவக்கினர். அந்த இயக்கத்தின் பெயர், ‘வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி’. தெற்கிலும் வடக்கிலும் உள்ள இந்த இரு அமைப்புகளுடனும் தொடர்புகொண்டு தமிழரசுக் கழகம் செயல்படத் தொடங்கிற்று.

விளக்கக் கூட்டங்கள் வேகமாக நடந்தன. பல இளைஞர்கள் தமிழ் மாநிலம் அமைத்திடத் தங்களின் உயிரையும் பொருட்டாக மதிக்காமல் உழைத்திட முன் வந்தனர். நாடு முற்றிலும் தமிழரசுக் கிளைக்கழகங்கள் ஆரம்பமாயின. பல ஆயிரம் தொண்டர்கள் சேர்ந்தனர். பலமான அமைப்பாகத் தமிழரசுக் கழகம் வளர்ந்தது.

பத்திரிகைகளின் ஆதரவில்லை. கட்சிகளின் ஒத்துழைப்பில்லை. பணபலமும் இல்லை. ஆனால் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிற்று. மும்முனைகளிலும் போராட்டம் வலுவாக திருவிதாங்கூர் கொச்சி ராஜ்ஜியம் (கேரளத்திற்கு அன்றுள்ள பெயர்) மட்டுமல்ல, மதராஸ் ராஜ்ஜிய அரசும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பல்லாயிரம் பேர் சிறைப்பட்டனர். இருவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தனர். இருவர் சிறைச்சாலையில் உயிர்துறந்தார்கள்.

சென்னை நகரை ஆந்திரர்கட்கும் தமிழர்கட்கும் சரிபாதியாகப் பிரித்தளிப்பதென்ற மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

சென்னையை சி.ஸ்டேட்டாக டில்லியின் கீழ் வைப்பதென்கின்ற திட்டம் உடைத்தெறியப்பட்டது. சென்னை தமிழர்கட்கே என ஆக்கப்பட்டது.

கன்னியாகுமாரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது; 1957 நவம்பர் முதல் நாளன்று.

சித்தூர் மாவட்டம் முழுமையுமாக ஆந்திர்கட்கென ஆக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி, திருத்தணி தாலுகா மீட்கப்பட்டது; 1960 ஏப்ரல் முதல் நாள்.

திருத்தணி மீட்சியில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டியின் செயற்பாடு மிக அதிகம். இதற்கெனவே உழைத்து உயிர் துறந்தவர் மங்களம் கிழார் எனும் மாமனிதர். மற்றும் திருத்தணி சுப்பிரமணியம், விநாயம் எம்.எல்.ஏ. போன்றோரும் குறிப்பிடத்தக்கவராவர்.

கன்னியாகுமரி மாவட்ட மீட்சியின் பெரும் பங்கு தி.த.நா. காங்கிரஸ் அமைப்பினரையே சாரும். அதில் அங்கம் வகித்த பெரிய மனிதர்கள் பலர். செல்வாக்கு மிகுந்த அவர்களைச் செயற்படச் செய்த செயலாளர் தெற்கெல்லைத் தளபதி எனப் பெயர் பெற்ற திரு. ‘பி.எஸ்.மணி. இவர் சுதந்திரப் போராட்டத் தியாகியுமாவார்.

“இப்போராட்டங்களில் என் பங்கும் குறைந்ததன்று. திங்கள் இரு முறை ஏடுகள் இரண்டும் கிழமை ஏடு ஒன்றுமாக மூன்று ஏடுகளை நடத்தினேன். தமிழகமெங்கும் சுற்றி சொற்பொழிவுகள் ஆற்றினேன். பொதுச் செயலாளனாகப் பொறுப் பேற்றுச் செயல்பட்டது மட்டுமின்றி, பல போராட்டங்களையும் முன்னின்று நடத்தினேன்; சிறைப்பறவையுமானேன்.

நானும் தலைவர் ம.பொ.சி. அவர்களும் இணைந்து செயல்பட்டது. சமயம் கடந்த இனவழி ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தமிழக எல்லைப் போராட்டத்தையும் அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நான் எழுதிய பாடல்கள் அனைத்தும் அச்சிடற்கெனத் தேடியபோது இந்நூலில் உள்ள அளவே; கிட்டியதும் முழுவதுமாக வெளிவரும்.

இந்திய மாநிலங்களின் சீரமைப்பு பற்றியும், அந்த அடிப்படையில் புதிய தமிழகம் அமைந்தது பற்றியும் ஒரு நூல் வருமானால் ஆய்வாளர்கட்கு மிகவும் பயன்தரும். எழுதிட எண்ணம், இறையருள் துணை நிற்குமாக!

இந்நூல் அளவில் சிறியதேயாயினும் வரலாற்றுச் சிறப்புடையது. 1947க்குப் பின்னர் 1960 வரையிலுமான சில நல்ல தகவல்களை இந்நூல் தருகின்றது”

நன்றி: உங்கள் நூலகம் இதழ் – சூலை -2022