மார்சல் நேசமணி

மார்சல் நேசமணி

“தென் எல்லைக் காவலர்”

மார்சல் நேசமணி
பிறந்த நாள்
12.6.1895

மொழி, இனம், தாயகம் இந்த மூன்றும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகள். 1956க்கு முன் இந்தியத்துணைக் கண்டத்தில் மொழிவழித் தாயகங்கள் உருவாக்கப்பட வில்லை. இந்திய விடுதலைக்கு முன்னரே மொழிவழித் தேசிய உணர்வு பெற்று மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள்  மொழிவழி மாநிலம் கேட்டு போராடி வந்தனர்.

காங்கிரசு பேரியக்கத்தில் தொண்டாற்றிய ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர் மட்டுமே மொழிவழித் தாயக கோரிக்கையின் தேவையை உணர்ந்தனர். காங்கிரசு ஆதரவு தர மறுத்த நிலையிலும் தனி இயக்கம் கண்டனர். வடக்கெல்லைப் போரில் சென்னை, திருத்தணி அதன் சுற்றியுள்ள பகுதிகளை ம.பொ.சி. அவர்களும், தென் எல்லைப்போரில் கன்னியாகுமரி அதன் சுற்றியுள்ளப் பகுதிகளை நேசமணி அவர்களும் பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவின்றியே போராடி நமக்கு மீட்டுத் தந்தனர்.

திருவிதாங்கூர் சமசுதானத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித் திணிப்பு, தாயக மண் பறிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழர் விடுதலை காண வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பியவர் மார்சல் நேசமணி.

12.6.1895ஆம் ஆண்டு அப்பல்லோசுட்- ஞானம்மாள் இணையருக்கு மகனாக நேசமணி பிறந்தார். இவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி. ஆகும். இவர் நாகர் கோயில் ஸ்காட் உயர்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, பின்னர் நெல்லை சி.எம்.எஸ். கல்லூரியில் பட்ட முன்படிப்பில் சேர்ந்து படித்தார்.

திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பட்ட மேல் படிப்பைத் தொடர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார். கர்நூல், திருச்சியில் ஆசிரியர் பணி புரிந்த நிலையில் அநீதியால் பாதிக்கப்படும் மக்களுக்கு தொண்டாற்ற விரும்பினார். அதற்கேற்ற வகையில் திருவனந்தபுரத்தில் சட்ட படிப்பைக் கற்று முடித்தார்.

1.9.1914இல்.பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க கரோலின் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

1921ஆம் ஆண்டில் நாகர் கோயிலில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். அப்போது அவர் பணியாற்றிய நீதிமன்றத்தில் சாதிப்பாகுபாடு நிலவி வந்தது. கையுள்ள நாற்காலிகள் மேல்சாதியாருக்கும், முக்காலிகள் (stool)  ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமரும் நிலை இருந்தது. இதை நேசமணி கடுமையாக எதிர்த்ததோடு முதன்முதலாக கையுள்ள நாற்காலியில் அமர்ந்து தனது உரிமையை நிலை நாட்டினார்.

குற்றவியல் வழக்குகளில் திறம்பட பணியாற்றியதால் மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கினார். இதன்காரணமாக 1943ஆம் ஆண்டில் நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவிதாங்கூரில் சொத்துரிமை உள்ளவர்கள் மட்டுமே நிர்வாக சபைத் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியும் . இந்நிலையை மாற்ற விரும்பிய நேசமணி  திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி.இராமசாமி ஐயரிடம் போராடி வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டில் நாகர்கோயில் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றார். முதன்முறையாக கல்குளம், விளவங்கோடு வட்டங்களின் பிரதிநிதியாக திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமூகநீதிக் கொள்கையில் பேரார்வமிக்க நேசமணி  9.12.1945இல் நெய்யூர் எட்வின் அரங்கத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு எனும் சமூகநீதி இயக்கத்தை தோற்றுவித்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னரும் திருவிதாங்கூர் அரசால் அங்கு வாழும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு  சொல்லொண்ணத் துயரம் அடைந்து வந்தனர். மலையாள- தமிழ் மக்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்ட  சமசுதான காங்கிரசு கட்சியும்  ஐக்கிய கேரளம் உருவாகும் நிலை வந்தால் தாய்த்தமிழகத்தோடு தமிழ்ப்பகுதிகள் இணைக்கப்படுவதாக உறுதிமொழி  தந்தது. அதில் மலையாளிகள் ஆதிக்கம் மிகுந்து தமிழர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. திரு. தமிழ் மக்களின் வேதனைகளை நேரு தலைமையிலான காங்கிரசுக் கட்சியும் கண்டும் காணாமல் இருந்து வந்தது.

மலையாளிகளின் நலன் காக்கும் சமசுதான காங்கிரசுக்கட்சி போல தமிழர் நலன் காக்கும் கட்சி ஒன்று தேவை என்பதை நேசமணி உணர்ந்தார். அதனடிப்படையில் நாகர்கோயில் ஆலன் நினைவு மண்டபத்தில்  8.10.1947 இல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவித்தார்.

10.2.1948இல்  திருவிதாங்கூரில்  தேர்தல் அறிவிக்கப்பட்டது. மலையாளிகளின் சமசுதானக் காங்.கட்சிக்குப்  போட்டியாக நேசமணியின் திரு.தமிழர் காங்.கட்சி  களத்தில் குதித்தது. தோல்வி பயம் கொண்ட   சமசுதான காங்.கட்சிக்கு ஆதரவாக மலையாள காவலர்கள் துணை நின்று  வன்முறையில் ஈடுபட்டனர். இரண்டாயிரம்  தமிழர்கள் ஆண், பெண் பேதமின்றி தாக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கில் பொய்வழக்குகள் போடப்பட்டன. மாங்காட்டில் தேவசகாயம் என்பவரும்,  பெரியவிளையில் செல்லையன் என்பவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். 

மொத்தமுள்ள 120 இடங்களில் சமசுதான காங்.கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் 18 இடங்களில் போட்டியிட்ட திரு.தமிழர் காங்.கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. விளவங்கோடு தொகுதியில்  போட்டியிட்ட நேசமணி வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

17.6.1948இல் மொழிவழி மாநிலம் அமைப்பதற்காக குடியரசுத்தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்களால் நியமிக்கப்பட்ட  தார் குழுவானது ஐக்கிய கேரளம் அமைக்க பச்சைக் கொடி காட்டியது. உடனடியாக கேரளக் காங்கிரசு (மலபார்) கட்சித் தலைவர் கேளப்பன் கேரளம் முதல் காசர்கோடுவரை “ஐக்கிய கேரளம்”அமைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். குமரி எங்கள் தலை என்றும், திருவனந்தபுரம் எங்கள் நெஞ்சு என்றும் , காசர் கோடு எங்கள் பாதம் என்றும், தலையை ஒருநாளும் இழக்க மாட்டோம் என்றும் மலையாளிகள் ஒற்றுமையாக முழங்கினர்.

மலையாளிகளின் நெருக்குதலைக் கண்டு அஞ்சிய பிரதமர் நேரு 1949இல் மலையாளிகளின் இன்னொரு தனிப்பகுதியாக இயங்கிய கொச்சியை திருவிதாங்கூருடன் இணைக்க முடிவு செய்தார். இது அறிவிக்கப்படாத ஐக்கிய கேரளமானது.   “விசாலா ஆந்திரா” கேட்டு நீண்ட நாட்களாக போராடியவர்களுக்கு கிடைக்காத வெற்றி, “ஐக்கிய கேரளம்” கேட்டுப் போராடிய மலையாளிகளுக்கு உடனடியாகக் கிடைத்தது. இதற்குக் காரணம் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு  உதவியாக இருந்த வி.பி.மேனன் ஆவார்.

தில்லி அரசின் நயவஞ்சகச் செயல் மார்சல் நேசமணிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. உடனடியாக நேசமணி, எ.ஏ.ரசாக், சிவராமபிள்ளை ஆகிய மூவரும் பட்டேலின் உதவியாளர் வி.பி.மேனனை சந்தித்து மனு அளித்தனர். அதில், “திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்குமாறு”  வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பிரச்னையை கவனிக்க எனது அமைச்சர் எனக்கு எந்த அதிகாரமும் வழங்க வில்லையே என்று வி.பி.மேனன் நழுவிப் பேசவே , மூவரும் வேறுவழியின்றி வெளியேறினர்.

உடனடியாக நேசமணி தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக 13.4.1949இல் திருவிதாங்கூர் அரசின் வெளியீட்டையும்,  முத்திரையையும் கொளுத்தும்படி வேண்டிக் கொண்டார். நத்தானியல், ஆர்.கே.ராம், காந்திராமன், பி.எஸ்.மணி ஆகியோர் கொளுத்தும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

5.11.1949இல் சென்னையில் ம.பொ.சி.அவர்களின் தமிழரசுக் கழக மாநாட்டில் நேசமணி பங்கேற்றுப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் நேசமணியிடம்,” ஐக்கிய கேரளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்படாமல் இருந்தால் நீங்கள் ஐக்கியத் தமிழகம் அமைக்க வேண்டுமென்று சொல்லியிருப்பீர்களா? ” என்று வினா எழுப்பப்பட்டது. அதற்கு நேசமணி, ” வெள்ளையர் போகாமல் இருந்தால் ஐக்கியக் கேரளம் அமைய வேண்டுமென்று கேட்டிருப்பார்களா?  என்று இப்போது நான் கேட்டால் அது புத்திசாலித்தனமான கேள்வியாக இருக்குமா?”  என்று கூறவே,  கேள்வி கேட்ட செய்தியாளர் வாயடைத்துப் போனார்.

6.1.1950இல் திரு.தமிழ்.காங். சார்பில் குமரியில் “தமிழ்நாடு எல்லை மாநாடு” நடைபெற்றது. இதில் கவிமணி தேசிக விநாயகம் தொடக்க உரையாற்றினார். அதில் தலைமை உரை நிகழ்த்திய நேசமணியின் பேச்சு உணர்வுபூர்வமாய் எழுச்சியோடு இருந்தது. அதுவருமாறு:

“கேரள மாகாணம் உருவாவதற்கு தமிழன் ஒருபோதும் தடை கூறவில்லை. ஆனால் தமிழனின் ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாது கேரள மாகாணம் வேண்டுமென டில்லிக்குக் காவடி எடுத்துச் செல்லும் கேரளியரே, அந்த உரிமையை, மலையாளி ஆதிக்கத்தை பொறுக்க முடியாத ஐக்கிய சமஸ்தானத்து தமிழனுக்கு வழங்கத் தயங்குவானேன்?” …

இங்குள்ள தமிழன் இன்னும் தாழ்ந்து கிடப்பதென்பது எண்ணவும் முடியாத ஒரு விஷயமாகும். துப்பாக்கியினாலும், போலீஸ் குண்டாந்தடியாலும் , பொய் வழக்குகளாலும் , அவசர சட்டங்களினாலும் , ஐக்கிய சமஸ்தானத் தமிழனை, அதுவும் அவனைக் கைதூக்கி எடுக்க தாய்த்தமிழகம் முனைந்திருக்கும் இந்த வேளையில் அடக்கி ஒடுக்கி ஆண்டு விடலாம் என்று கேரள ஆதிக்கவாதிகள் எண்ணுவது வெறும் பகற்கனவேயாகும்.!”

1952இல் திரு.தமிழ்.காங்.கட்சி இரண்டாக பிளவுபட்ட நிலையில் பாராளு மன்ற, சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அத் தேர்தலில் நேசமணி 8  இடங்களில் வெற்றி பெற்றார். இது அவருக்கு மக்களிடமிருந்த செல்வாக்கை மீண்டும் மெய்ப்பித்தது. இதை உணர்ந்து பிரிந்து சென்ற தாணுலிங்கனார் தலைமையிலான குழுவினர் ஓரணியில் இணைந்தனர். இதனை தாயுள்ளத்தோடு நேசமணி ஏற்றுக் கொண்டார். அப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1954 இல் திருவிதாங்கூர் காங்கிரசுக் கட்சி அமைச்சரவை கவிழ்ந்ததால்  திரு.கொச்சி சட்ட மன்றத்திற்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருவிதாங்கூர் (மலையாள) காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாக  காமராசரும், நேருவும் களம் கண்டனர். அப்போது காமராசர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது, “மார்சல் பட்டத்தை நேசமணிக்கு எவன் கொடுத்தான்? நேசமணி எந்த யுத்த களத்திற்குப் போனார்? மார்சல் பட்டமென்ன கடைச்சரக்கா?” என்று  கிண்டல் செய்தார்.
மார்சல் நேசமணியோ மீண்டும் 12 இடங்களில் வெற்றி பெற்று நேரு, காமராசர் இருவருக்கும் பதிலடி கொடுத்தார்.
( நேசமணிக்கு “மார்சல்” பட்டத்தை அளித்து சிறப்பித்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.இரசாக் என்பது குறிப்பிடத்தக்கது)

தேவிகுளம், பீர்மேடு பகுதியில் நேசமணி செல்வாக்கு பெருகுவதை அன்றைய மலையாள முதல்வர் பட்டம் தாணுப் பிள்ளை விரும்பவில்லை. தமிழ்த் தேயிலைத் தொழிலாளர் மீது அடக்குமுறையை ஏவினார். பாதிக்கப்பட்ட தமிழ்த் தொழிலாளரை பார்ப்பதற்காக மூணாறு சென்ற நேசமணி, சிதம்பரநாதன், அப்துல் ரசாக்  ஆகியோர்  மீது பொய் வழக்குப் போடப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

11.8.1954 இல் ஆகஸ்டு விடுதலை நாள் கிளர்ச்சியை நேசமணி சார்பில் குஞ்சன் நாடார் அறிவித்தார். திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளில் வேலை நிறுத்தம், கடையடைப்பு, சாலை மறியல் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அப்போது நடந்த கிளர்ச்சியில் 9 தமிழர்கள் மலையாள வெறியின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர்.

கண்டால் அறியும் புள்ளி என்ற கொடிய சட்டம் ஏவப்பட்டு தமிழர்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சந்தேகத்தின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் கடும் சித்திரவதைக்கு உட்டடுத்தப்பட்டனர். இது இரண்டாவது முறையாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலாகும்.

1953இல் ‘விசாலா ஆந்திரா’ கேட்டு  போராட்டம் தீவிரமடைந்தது. அதனைக் கண்டு கலக்கமுற்ற நேரு  மொழிவழி மாகாணம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். பசல் அலி தலைமையில் மாநில புனரமைப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினராக பொறுப்பு வகித்த பணிக்கர் எனும் மலையாளியின் ஆதிக்கம் காரணமாக தமிழர்கள் அதிகம் வசித்த  ஒன்பது வட்டங்களில் நான்கு வட்டங்கள் மட்டுமே தமிழகத்தோடு இணைக்க ஒப்புதல் தரப்பட்டது.

அதன்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை நகர்ப்பகுதி ஆகிய 5 வட்டங்கள்  தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. மீதமுள்ள 4 வட்டங்களான தமிழர்கள் அதிகம் வசித்து வந்த தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை வனப்பகுதி, நெய்யாற்றின் கரை ஆகிய வட்டங்களை மலையாளிகள் பிடுங்கிக் கொண்டனர்.

இதனைக் கண்டு கோபமுற்ற நேசமணி பாராளுமன்றத்தில் 1955ஆம் ஆண்டு 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் வரலாற்று சான்றாவணங்களைக் காட்டி முழக்கமிட்டார். பிற்காலத்தில் முல்லைப்பெரியாறு அணைச்சிக்கல் வருமென்று உணர்ந்த காரணத்தாலோ என்னவோ அதனையும்  உணர்ந்தே பேசினார். அது வருமாறு:

” பெரியாறு நீர் தேக்கத்திற்கு நீர் வடிப்பு 305 சதுர மைல்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது… எனவே தேவிகுளம், பீர்மேடு இரு தாலுக்காக்கள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும்…

தேவிகுளத்திற்குச் சென்று தேயிலை காடுகளைக் கேளுங்கள். தமிழ் மக்களின் நெற்றி வியர்வை சிந்தி தமிழர்களின் குருதியால் வளர்க்கப்பட்டவை என்றும், தமிழ் முன்னோர்களின் எலும்பும் அவர்கள் சாம்பலும் தேயிலைச்செடிகளுக்கு உரமாயின என்றும், தமிழ் இளவல்களின் பிஞ்சுக்கரங்களால் நட்டு வளர்க்கப்பட்டவை அவை என்றும், வரலாறு கூறும் அச்செடிகள். அச்செடிகளும் அவ்வூர் மக்களும் கூறுவர் இது தமிழ்நாடு தான் என்று!”

1956, நவம்பர் 1இல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்ட பிறகு இழந்த தமிழ்ப்பகுதிகளை மீட்டெடுப்பற்கான போராட்டங்கள் வலுப் பெறவில்லை. இந்நிலையில் , 1957ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாள் காமராசர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் திரு.தமிழ்.காங்.கட்சியை இணைக்க பெரும்பாலனோர் ஒப்புக் கொள்ளவே, வேறுவழியின்றி நேசமணி அதனோடு இணைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிள்ளியூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் காங்கிரசுக் கட்சி தோற்ற நிலையில் குமரி மாவட்டத்தில் அது 6 இடங்களில் வெற்றி பெற்றது. இது நேசமணியின் தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தியது. அப்போது நடைபெற்ற நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டுமொரு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருமுறை கூட மக்களால் தோற்கடிக்கப்படாத மாபெரும் தலைவராக விளங்கிய மார்சல் நேசமணி 1.6.1968இல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்.

நூல் தரவுகள:
1.திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, -பி.யோகீசுவரன்
2. தமிழக எல்லைப் போராட்டங்கள்,
-முகிலை இராச பாண்டியன்
3. நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்,
– ஏ.ஏ.ரசாக்

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், சூன் 1-15 (2017)

Leave a comment