அண்ணாவின் “திராவிட நாடு” கோரிக்கையை தோலுரித்த வினோபா!

அண்ணாவின் “திராவிட நாடு” கோரிக்கையை தோலுரித்த வினோபா!

1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே” எனும் தமிழ்த்தேசிய முழக்கம் தமிழ்நாட்டில் எழுந்தது. நீதிக்கட்சிக்கு பெரியார் தலைவரான போது அந்த முழக்கம் திசை திருப்பப்பட்டது.

1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி திருவாரூர் மாநாட்டில் ‘திராவிடநாடு’ கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றிலிருந்து திராவிட நாடு கோரிக்கையை இந்திய விடுதலைக்குப் பின்னரும் கூட பெரியார் கை விட மறுத்தார். அதுபோல் அவரின் தளபதி அண்ணாவும் மொழிவழி மாகாணப் பிரிவினைக்குப் பின்னரும் கூட கை விட மறுத்து வந்தார்.
1912ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தில் மொழிவழி மாநிலம் கேட்டுப் ஆந்திரர்கள் போராடி வந்தனர். அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை எப்போதும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. இந்த உண்மை தெரிந்திருந்தும் தமிழர் மீது பெரியாரும், அண்ணாவும் திராவிட நாடு கொள்கையை திணித்து வந்தனர்.
1956ஆம் ஆண்டு காந்தியின் சீடரும், நிலக்கொடை (பூமிதானம்) இயக்கத் தலைவருமாகிய வினோபா பாவே அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார். நிலக்கொடைக்கு ஆதரவு கேட்டு அண்ணாவை காஞ்சிபுரம் தென்னூரில் சந்தித்து உரையாடினார்.

அதில் திராவிட நாடு கோரிக்கை எப்படி சாத்தியமாக முடியும் என்பதை கேள்வி மேல் கேள்வி கேட்டு அண்ணாவை திணறடித்தார்.

இதற்குக் காரணம் ஆந்திராவின் பகுதிகளில் வினோபா சுற்றுப்பயணம் போகும் போது விசாலா ஆந்திரம் கேட்டுப் போராடி வந்த ஆந்திரர்களின் இன உணர்ச்சியை அறிந்து வைத்திருந்தார்.
திராவிடநாடு கோரிக்கையை ஆந்திரர்கள் ஏற்கவில்லை என்பதை மகாராட்டிரத்தில் பிறந்த வினோபாவிற்கு தெரிந்திருந்திருக்கிறது.

ஆனால் காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாவிற்கு மட்டும் இது தெரியவில்லை என்பது கேள்விக்குரியது.

10.6.1956இல் வினோபாவிற்கும் அண்ணாவிற்கும் நடைபெற்ற உரையாடல் கீழே சுருக்கித் தரப்பட்டுள்ளது. அண்ணாவின் குழப்பம் தரும் பதில்களை படிப்பதன் மூலம் அவர் தெரிந்தே தமிழர்களை ஏமாற்றினார் என்கிற உண்மை புலப்படும்.
பாபா: உங்கள் கழகம் பூமிதான இயக்கத்தில் ஈடுபடலாமல்லவா?
அண்ணா: நாங்கள் கழக ரீதியாக பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டால் வேறு சில கட்சிகளுக்கு வருத்தமேற்படும்.
பாபா: அப்படியானால் உங்கள் கட்சியில் சேர வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்?
அண்ணா: எங்கள் கழகம் அகில இந்திய ரீதியில் நடைபெறவில்லை. குறிப்பிட்ட பிராந்தியத்தில் தானே நடைபெறுகிறது.
பாபா: வேறு மாகாணத்தினர் உங்கள் இயக்கத்தில் ஈடுபடக் கூடாது என்று நியதியா?
அண்ணா: இல்லை. தமிழர்கள் அதிகமாக இருப்பதால் தமிழர்கள் தான் எங்கள் கழகத்தில் அதிகம் சேர்ந்திருக்கிறார்கள்.
பாபா: ஆந்திரர், கன்னடத்தார், கேரளத்தார் சேரலாமல்லவா?
அண்ணா: நிச்சயமாகச் சேரலாம். திராவிடர் என்ற அடிப்படையில் இவர்கள் எல்லோரும் சேரலாம். அது தான் கழகத்தின் எண்ணமும் கூட.
பாபா: ஆந்திர மாகாணத்தில் என்னுடைய 7 மாத சுற்றுப்பயண அனுபவத்திலிருந்து ஆந்திரர்கள் தமிழர்களோடு சேர்ந்து வாழப் பிரியமில்லாமல் இருக்கிறார்கள் என்று தான் எண்ணுகிறேன். ஆந்திரர்கள் தனித்து வாழவே ஆசைப்படுகின்றார்கள்.
அண்ணா: 6, 7 வருடங்களாக ஆந்திரர்கள், தமிழர்கள் தங்கள் கையில் எல்லா அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். பாபா அவர்கள், ஆந்திரர்கள் தமிழர்கள் மீது இந்தத் தவறான எண்ணத்தினால் அதிக வெறுப்புக் கொண்டிருந்த நேரத்தில் சுற்றுப்பயணம் செய்ததால் அவ்வாறு கூறுகிறாரென்று எண்ணுகிறேன்.
பாபா: தமிழர்கள் மீது ஆந்திரர்கள் வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்று கூற வில்லை. அவர்கள் தனி மாகாணமாக தனித்து வாழவே விரும்புகின்றார்கள்….
பாபா: ஆந்திராவில் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவு கிடைக்குமா?
அண்ணா: ஆந்திராவில் இதுவரை எம் முயற்சியும் எடுத்துக் கொள்ள வில்லை. தமிழ்நாட்டிலேயே இன்னும் எங்கள் வேலை சரிவர முடிய வில்லை.
பாபா: ஆந்திரர்கள் டில்லியோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர் என்று நினைக்கிறேன்.
அண்ணா: இன்றைய சூழ்நிலையில் அவ்வாறு தெரியலாம். ஆனால் டில்லி அரசு ஐந்தாண்டுத் திட்டம் போன்ற பல திட்டங்களில் ஆந்திராவையும், மைசூரையும், தமிழ்நாட்டையும் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் கிடைத்திருக்கும் பங்கைப் போல உரிய பங்கு இவைகளுக்குக் கொடுக்கப்படவில்லை.

இதுவரை ஆந்திரர்கள் தமிழர்களால் தான் தங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று கருதினர். இனி பல வழிகளில் பல பிரச்சினைகளில் ஆந்திரர்கள் டில்லியால் புறக்கணிக்கப் படுவதை உணரும் பொழுது எங்களோடு சேருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
பாபா: மத்திய அரசாங்கம் ஆந்திரர்களுக்கும் அநீதி செய்கிறது என்பதனால் இந்த நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. டில்லி நியாயமாக நடந்து கொண்டால் அவர்கள் உங்களோடு சேர மாட்டார்களல்லவா?
அண்ணா: இல்லை. மத்திய அரசாங்கம் ஒன்று இருக்கும் வரை இப்படிப்பட்ட அநீதிகள் நடந்து கொண்டே தான் இருக்கும். இப்பொழுது இருக்கும் சர்க்கார் அளிக்கும் சலுகைகள் கூட வட இந்தியாவில் இனிவரும் சர்க்கார் அளிக்காது என்று எண்ணுகிறேன்.”

(பின்னர் விடையிறுத்த பாபா உங்கள் கோரிக்கை நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே உள்ளது என்று கூறி விடை பெற்று சென்றார்.)
ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு தேனீர் கடையில் நின்று, ‘யாருமே இல்லாத கடையில் யாருக்கடா டீ ஆத்துறா?’ என்று கிண்டலடிப்பார். அது போல் தான் அன்றைக்கு திராவிட இயக்கத்தினர் ஆந்திரரும், கேரளரும், கன்னடரும், தமிழரும் கேட்காத நிலையில் திராவிட நாடு ‘டீ’யை ஆத்தி வந்தனர். இன்றைக்கும் அவரின் வாரிசுகள் பால் இல்லாத (திராவிடநாடு இல்லாத) வெறும் வறட்டு ‘திராவிட’ டீயை ஆத்தி தமிழர்களை விடாமல் ஏமாற்றி வருவது மிகக் கேடு கேட்ட செயலாகும்!

3 thoughts on “அண்ணாவின் “திராவிட நாடு” கோரிக்கையை தோலுரித்த வினோபா!

  1. அண்ணா தனக்குத் தெரிந்த அளவில் தமிழ் தேசியத்தைப் பேசினார்!!
    உங்களால் என்ன செய்ய முடிந்தது??
    என்றைக்காவது உங்களால் தீவிரமாக ஆர்எஸ்எஸ் ஐ எதிர்க்கமுடிந்ததா?

    Like

  2. திராவிடநாடு கோரிக்கையை ஆந்திரர்கள் எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்ல அறிந்திருக்கவில்லை. அண்ணாவே சொன்னதுபோல தமிழகத்திலேயே காங்கிரஸை வீழ்த்தாமல் எங்கே திராவிடநாடு பற்றி பேசுவது ? ஆனால் வடக்கு வாழ்வதும் தெற்கு தேய்வதும் நிதர்சனம் என்பதால் அதற்கான தேவை வரும் என்று அண்ணா தனது கோரிக்கையை ஒத்திவைத்து சொன்னது மறந்துவிட்டதா ? ஆந்திராவில் அந்த கோரிக்கை எழுந்ததும் என்டிஆர் ஆட்சிக்கு வந்ததும் வரலாறு. கர்நாடகத்தில் அது சீக்கிரமே நடக்கும். ஆனால் இந்தக் கோரிக்கைகளை அன்றே மாநில சுயாட்சி என்று அகில இந்திய அளவில் எதிரொலிக்குமாறு அண்ணா மாற்றியதை நீங்கள் அறியவில்லை போலும். எந்த டீக்கடையிலும் ஆரம்பித்ததும் கூட்டம் வராது. ஆர்எஸ்எஸ் நடத்தாத டீக்கடையா ..டீக்கடை பையன்கள் ஆட்சிக்கு வரவில்லையா ?

    Like

  3. திராவிடநாடு கோரிக்கையை ஆந்திரர்கள் எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்ல அறிந்திருக்கவில்லை. அண்ணாவே சொன்னதுபோல தமிழகத்திலேயே காங்கிரஸை வீழ்த்தாமல் எங்கே திராவிடநாடு பற்றி பேசுவது ? ஆனால் வடக்கு வாழ்வதும் தெற்கு தேய்வதும் நிதர்சனம் என்பதால் அதற்கான தேவை வரும் என்று அண்ணா தனது கோரிக்கையை ஒத்திவைத்து சொன்னது மறந்துவிட்டதா ? ஆந்திராவில் அந்த கோரிக்கை எழுந்ததும் என்டிஆர் ஆட்சிக்கு வந்ததும் வரலாறு. கர்நாடகத்தில் அது சீக்கிரமே நடக்கும். ஆனால் இந்தக் கோரிக்கைகளை அன்றே மாநில சுயாட்சி என்று அகில இந்திய அளவில் எதிரொலிக்குமாறு அண்ணா மாற்றியதை நீங்கள் அறியவில்லை போலும். எந்த டீக்கடையிலும் ஆரம்பித்ததும் கூட்டம் வராது. ஆர்எஸ்எஸ் நடத்தாத டீக்கடையா ..டீக்கடை பையன்கள் ஆட்சிக்கு வரவில்லையா ?

    Like

Leave a comment