மொழிப்போர் ஈகி விருகம்பாக்கம் அரங்க நாதன் நினைவு நாள் 27.1.1965

இந்தி எதிர்ப்புப் போரில் தீயிட்டு உயிர் நீத்த மூன்றாவது ஈகி
விருகம்பாக்கம் அரங்க நாதன் நினைவு நாள்

27.1.1965

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விவரம் அறியாத சிறுவர்களின் போராட்டம் என்று கேலி செய்து கொண்டிருந்த காங்கிரசுத் தலைவர்களை வாய்மூட வைத்தவர் விருகம்பாக்கம் அரங்கநாதன்.
அவர் மாணவர் அல்ல.

மத்திய அரசின் தொலைப்பேசித் துறையில் பணியாற்றியவர். 27.12.1931ஆம் ஆண்டு ஒய்யாலி- முனியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவர். மான்கொம்பு சுழற்றுதல், சிலம்பாட்டம், சுருள் கத்தி வீசல் போன்ற வீர விளையாட்டுகளில் வல்லவராகத் திகழ்ந்தார்.

விருகம்பாக்கத்து இளைஞர்களால் ‘குரு’ என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன் விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைத்தார்.

அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். அதுபோக அந்த இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் ஏடுகளை படிக்கச் சொல்லியும் கடமையாற்றினார்.
தமிழ்மொழி மீது தீராப்பற்று கொண்ட அரங்க நாதன் 1965 சனவரி 26ஆம் நாள் எரிந்து கிடந்த கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேரில் கண்டு மனம் கலங்கிப் போனார்.

அன்றிரவு உறக்கம் கொள்ள வில்லை. சனவரி 27ஆம் நாள் நள்ளிரவு 2மணிக்கு விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகில் ஓர் மாமரத்தின் அடியில் நின்று கொண்டு தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். பொழுது விடிந்தது. அங்கிருந்தவர்கள் கருகிய உடலைக் கண்டனர்.
அவர் உடலின் அருகில் ஒரு அட்டையில் சுற்றபட்டுந்த நிலையில் கடிதங்கள் கிடந்தது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவற்றின் நகல்களைப் பதிவஞ்சலில் அனுப்பியதற்கான இரசீதுகளும் கைப்பற்றப்பட்டன.

அன்று வீரமிக்க இளைஞனை பறிகொடுத்த சோகத்தில் விருகம்பாக்கம் ஆழ்ந்து கிடந்தது.
இறந்துபோன அரங்க நாதனின் மனைவி பெயர் மல்லிகா.

அமுதவாணன் (வயது 7) அன்பழகன் (வயது 3) இரவிச்சந்திரன் (6 மாதக் கைக்குழந்தை) என்று மூன்று பச்சிளங்குழந்தைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்கு தான் ஆளானதைக் கண்டு மல்லிகா கடும் துயரம் அடைந்தார்.
அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலகநாடுகள் அவைக் கூட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி விவாதிக்கப்பட்டது.
அரங்கநாதன் பெயர் தாங்கிய சுரங்கப்பாதை சென்னையில் இப்போதும் அவரை நினைவு படுத்தியபடி உள்ளது.

தானுண்டு, தன் குடும்பமுண்டு, தன் பிள்ளைகளுண்டு என்று வாழாமல், தமிழுக்காகவே வாழ்ந்து மடிந்த வீரத் தமிழ்மகன் அரங்கநாதனை இந்நாளில் ஒவ்வொரு தமிழரும் நினைவில் கொள்வோம்!

Leave a comment