தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: கருணாநிதியின் இரண்டகம்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: கருணாநிதியின் இரண்டகம்!

மனோன் மணீயம் சுந்தரனார் ஒரு சிறந்த தமிழறிஞரும், தமிழ்ப்பற்றாளரும் ஆவார். நாடகத் தமிழுக்குப் புதிய இலக்கணம் படைத்தவர்.
அவர் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான “நீராரும் கடலுடுத்த” வை பெருமையோடு தமிழர்களாகிய நாம் பாடி வருகிறோம்.
அதில் தமிழை உயர்த்திக் காட்ட திராவிட நாட்டைப் பயன்படுத்தியிருப்பார். அவர் திராவிடநாடு என்று குறிப்பிடுவது கற்பனைப் பெருமிதம் தவிர வேறல்ல. அன்றைக்கு வெள்ளையர் வைத்திருந்த தென்னக நிர்வாகப் பரப்பு கற்பனைக்கு வாய்ப்பளித்தது. கூடவே கால்டுவெல் ஒப்பிலக்கணம் ஊக்கமளித்தது. அவர் “திராவிடர் இனம்” ஒன்று இருப்பதாகவும் எங்கும் குறிப்பிடவும் இல்லை.

1971ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் அந்தப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. தமிழுணர்ச்சிப் பாடல்களால் தமிழர்களை தட்டியெழுப்பிய பாரதிதாசனின் பாடல்கள் அப்போது அவருக்கு நினைவிற்கு வர வில்லை.
இத்தனைக்கும் பாரதிதாசன் மறைந்து ஏழு ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. பாண்டிச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இன்றும் பாடப்படுகிறது.

பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே!”

எனும் பாடல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கருணாநிதியைப் பொறுத்தவரை ‘திராவிட சரக்கு’ இல்லாத எதை ஒன்றையும் வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளி விடுவார். சுந்தரனாரின் பாடலில் உள்ள “தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்” எனும் வரிகள் தான் அவருக்கு உற்சாகத்தை தந்தது.

இனத்தால் “நான் திராவிடன்” என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி தன்னைப்போலவே தமிழர்களும் திராவிடத்தை உச்சரிக்க வேண்டுமென விரும்பினார். அதனை வாழ்த்துப்பாடல் என்ற பெயரில் நிலை நாட்டிக்கொண்டார்.

அது மட்டுமல்ல, சுந்தரனாரின் சிலவரிகளை விட்டொழிக்கவும் துணிந்தார். இதனை தட்டிக் கேட்பதற்கு பாவம் சுந்தரனாரும் உயிரோடு இல்லை. எதையும் ஒட்டியும் வெட்டியும் படம் காட்டும் திரைத்துறையின் வழி வந்தவர் கருணாநிதி.

அவர் வெட்டிய வரிகள் இதோ:
“கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

மேற்கண்ட வரிகளை வெட்டியதற்கான காரணத்தை ஆர்.எம்.வீரப்பன் 80வது பிறந்த நாள் விழாவில் கருணாநிதி கூறுவதைக் கேட்போம்:

“அதிலே கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே” என்று ஒரு வரி இருக்கிறது. அந்த வரி விடப்பட்டது. காரணம் கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் என்பதெல்லாம் மொழி ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கலாம். கன்னடக்காரர்களால் ஒத்துக்கொள்ள முடியுமா?

தெலுங்குக்காரர்கள் ஒத்துக்கொள்வார்களா? நாம் இங்கே தமிழை வாழ்த்தப் போய் தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே கசப்பும் பூசலும் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வரி விடப்பட்டது.

(முரசொலி 11.9.2005 வெளியூர்)

தமிழிலிருந்து தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றியதாகக் கூறுவதை தமிழரல்லாத தெலுங்கரோ, கன்னடரோ, மலையாளியோ என்றைக்கும் ஒப்புக் கொள்வதில்லை என்பது உண்மை தான்.

ஆனால், இந்தப்பாடலை அவர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாடும் பாடி யாரும் சொல்ல வில்லையே? தமிழ்நாட்டில் தமிழர்கள் தானே பாடப்போகிறார்கள்?

இதற்கு அண்டை மாநிலத்தவரை காரணம் சொல்வதேன்?

அண்டை மாநிலத்தவர்கள் திராவிடம் என்பதையோ, திராவிடர் என்பதையோ கூடத் தான் ஒப்புக் கொள்ள வில்லை. அதன் காரணமாக “திராவிட நல்திருநாடும்” வரிகளை நீக்கிட கருணாநிதி முன் வர மறுத்தது ஏன்?

ஆனால் இளித்தவாய் தமிழர்கள் மட்டும் ஆரியன் சூட்டிய “திராவிட” முள்கீரிடத்தை சுமக்க வேண்டுமாம்!

கருணாநிதி கர்நாடகத்தோடு காவிரி ஆற்று நீர் ஒப்பந்தத்தை (1974ஆம் ஆண்டு) புதுப்பிக்காமல் விட்டு விட்டதற்கான காரணம் எதுவென்பது இப்போது தான் புலப்படுகிறது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கன்னடர்களோடு கசப்பும் பூசலும் வந்து விடும் என்று கருதியே “உன்னுதரத் தேயுதித்தே” பாடல்வரிகளை நீக்கியவருக்கு காவிரி ஒப்பந்த விவகாரத்திலும் வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.

அடுத்து,
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து” -எனும் வரிகளை நீக்கியதற்கு கருணாநிதி சொல்லும் அடுத்த காரணத்தை அண்ணா அரசினர் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் 13.3.1986 இல் பேசியதை அறிவோமா?

“வடமொழியைப் போல உன்னுடைய எழிலோ அழகோ இவைகள் எல்லாம் அழிந்து விடாமல் இன்னும் இளமையோடு இருக்கின்ற தமிழே என்று (சுந்தரனார்) சொல்லியிருந்தார். அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து என்றாலும் கூட ஒரு வாழ்த்துப்பாடலில் அழிந்து ஒழிந்து என்றெல்லாம் வருகின்ற வார்த்தைகள் வாழ்த்துப்பாடலில் அமங்கல சொல்லாக ஒரு வேளை கருதப்படக் கூடுமோ என்ற எண்ணத்தின் காரணமாக- அந்த அழிந்து ஒழிந்து என்கிற சொற்கள் இல்லாமல் அவைகளை மாத்திரம் அதிலிருந்து விலக்கி விட்டேன்”

(முரசொலி 17.3.1986)
பகுத்தறிவு பகலவன் பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்ததாக கூறிக் கொள்ளும் கருணாநிதி “அழிந்து ஒழிந்து” போன்ற வார்த்தைகள் வாழ்த்துப்பாடலில் இருப்பதால் அது “அமங்கலச்” சொல்லாக கருதப்படும் என்று கூறுகிறார். இது தான் கருணாநிதி கூறும் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி!

பகுத்தறிவு பேசும் ஆசிரியர் வீரமணியும், கருணாநிதியும் நீண்ட காலந்தொட்டே கூடிக் குலாவி வருகிறார்கள்.

கருணாநிதியின் இந்த விளக்கெண்ணை விளக்கத்தை கேட்டு வீரமணியோ ‘வாழும் பெரியார்’ என கருணாநிதி மறையும் வரை போற்றத் தவற வில்லை.

தமிழைப் போற்றும் சுந்தரனார் பாடலில் கத்தரிக்கோல் வைத்ததோடு ஆரியத்திற்கும், அண்டையில் வாழும் திரிவடைந்த திராவிடத்திற்கும் விளக்கமளித்து அவ்விரண்டையும் காப்பாற்றியவர் மறைந்த கருணாநிதி என்பதை எத்தனை தமிழர்கள் அறிவாரோ?

2 thoughts on “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: கருணாநிதியின் இரண்டகம்!

  1. வடமொழிக்கே சொற்களை கடனாக தந்த மொழி தமிழ்.
    சமசுகிருதம் என்பதே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மொழி எனப் பொருளாக இருக்கும் போது, தமிழில் சமசுகிருத சொற்கலப்பு
    என்பதெல்லாம் தப்பித்துக் கொள்ளும் உத்தி.

    இது மொழியை குறித்த பார்வை.
    வேறொன்றை
    பற்றியது அல்ல.

    Like

  2. மனோன்மணீயம் ஆசிரியர் திரு சுந்தரனாரின் தமிழ்ப்பற்று பற்றியும் விரிவாக எழுதியிருப்பதைப் படித்தேன். மனோன்மணீயத்தையும் படித்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட சில ஐயங்கள்:
    ‘மனோன்மணி’ என்ற பெயரோ அல்லது சொல்லோ தூய தமிழ் இல்லை. மனோன்மணீயம் என்ற சொற்றொடர் தமிழ் இலக்கணத்திற்குப் புறமாக உள்ளது. வடமொழியில்தான் அந்த சொற்றொடருக்கு முறையான இலக்கணம் இருக்கிறது. ‘நாராயணீயம்’, கிராதார்ஜுனீயம்’ என்ற இடங்களில் சொல்லப்படும் இலக்கண முறைதான் ‘மனோன்மணீயம்’ என்பதற்கும் பொருந்தும். அதன் பொருள் ‘மனோன்மணீயைப் பற்றி’ என்பதாகும். ஆரியத்தைச் சாடிய சுந்தரனார், ஆரிய இலக்கணப்படி தம் நூலுக்கு பெயர் சூட்டியதேன்?

    நாடகத்தில் வரும் கதா நயகனின் பெயர் ‘புருஷோத்தமன்’, கதாநாயகி ‘மனோன்மணி, வில்லன் பெயர் ‘குடிலன்’, நல்லதற்கும் அல்லனவற்றுக்கும் வேறுபாடு தெரியாமல் தத்தளிக்கும் மன்னனின் பெயர் ‘ஜீவகன்’, மனோன்மணியின் தந்தை. இவர்களைத்தவிர ‘வாணி’, ‘நடராஜன்’ மற்றும் சுந்தர முனிவரின் வடமொழிப் பெயர் கொண்ட சீடர்கள். ஏன் இந்த வடமொழிப் பெயர்கள்?

    ‘பரத கண்டம்’, ‘வதனம்’, ‘திலகம்’ ‘வாசனை’ போன்ற வடமொழிச் சொற்களை முதல் பாடலிலேய புகுத்தி விட்டு, நாடக பாத்திரங்களுக்கெல்லாம் வடமொழிப்பெயர்களிட்டு, இவை எல்லாம் போதாது என்று, தமிழன் புரிந்துகொள்ள முடியாத கடும் வடமொழிச் சொற்களை (உதாரணம்: ‘இந்தனம்’: விறகு) அங்கங்கே புகுத்திவிட்டு, அதே சமயம், ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன்’ என்று அந்த வடமொழியின் மீது வெறுப்பை உமிழ்வது, கடைந்தெடுத்த ‘intellectual dishonesty’ இல்லையா?

    நூலின் வாயிலாக ஆசிரியர் என்ன கருத்தை வலியுறுத்துகிறார் தெரியுமா? ஆரியர் சொல்லும் ‘ஜீவாத்மா, பரமாத்மா’ தத்துவமே. இதை அவரே பெருமையாகக் கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

    Like

Leave a comment