தமிழ் ஊர்ப்பெயர் அழித்த ‘தெலுங்கு  முதல்வர்’ பொப்பிலி அரசர்

தமிழ் ஊர்ப்பெயர் அழித்த ‘தெலுங்கு முதல்வர்’ பொப்பிலி அரசர்

தமிழ் ஊர்ப்பெயர்களை தெலுங்கில் மாற்றிய பொப்பிலி அரசர்!

1911ஆம் ஆண்டு ஏப்ரல் வரைக்கும் வடவேங்கடம் தமிழ்நாட்டின் எல்லையாக இருந்தது. ஆங்கிலேய அரசு நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, குப்பம் ஆகிய வட்டங்களை இணைத்து சித்தூர் பெயரில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது. அப்போது ஆந்திரா மகாசபை அமைத்து “விசாலா ஆந்திரம்” கேட்டுப் போராடிய தெலுங்கர்கள் சித்தூர் பகுதியை தங்களுக்குரியதாக வாதாடி வந்தனர். இதை தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்ட நீதிக்கட்சி ஆந்திரர்களும் கண்டிக்க வில்லை. குறிப்பாக சென்னை மாகாண நீதிக்கட்சி முதல்வர் பொப்பிலி அரசர் (1932-1936) சித்தூர் மாவட்ட தமிழ் ஊர்ப் பெயர்களை தெலுங்கில் மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். ராவு ஸ்வச்சல்லபதி ராம்கிருஷ்ணா ரங்காராவ் என்ற பொப்பிலி அரசர் என்பது இவரின் முழுப்பெயராகும். பதிவுத்துறை, அஞ்சல் துறை இவ்விரண்டிலும்  தெலுங்குப் பெயர்களை புகுத்தி தமிழ் ஊர்ப்பகுதிகளை அழித்ததாக தனது ‘மொழிப்பற்று’ (1956) நூலில் மு.வரதராசனார் குறிப்பிடுகிறார்.

மு.வரதராசனார் ஒருமுறை தனது நண்பரைப் பார்ப்பதற்காக பெங்களூர் செல்லும் தொடர் வண்டியில் ஏறினார். ஜோலார்ப் பேட்டையை அடுத்த பச்சூர் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கினார். பின்னர் அங்கிருப்பவர்களிடம் ‘மாமுடிமான பல்லி’ க்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார். அப்படியொரு ஊரையோ, பெயரையோ கேள்விப் பட்டதில்லை என்று அங்கிருக்கும் அனைவரும் ஒரே குரலில் பதில் தருகின்றனர்.

தொடர் வண்டி நிலையத் தலைவருக்கும் அந்தப் பெயர் தெரியவில்லை. ஒரு வழியாய் அவரின் அருகில் இருந்தவருக்கு அந்த ஊரின் பெயர் தெரிகிறது. ‘மொழிப் பற்று’ நூலில் (பக்.70) மு.வ. தொடர்கிறார்: 

 

“ஒரு பெருமூச்சு விட்டு, அப்பா! யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்று சொல்கிறார்கள்; கடைசியில் நீங்கள் தான் சொன்னீர்கள்,” என்று நன்றியுணர்வோடு அவரைப் பார்த்து, “எத்தனை மைல்” என்றேன்.

“இங்கிருந்து ஒரு கல் தூரம் தான். எல்லாருக்கும் தெரிந்த ஊர் தான். ஆனால் நீங்கள் வெள்ளையக் கவுண்டனூர் என்று கேட்டிருக்க வேண்டும். அப்படிக் கேட்டிருந்தால் எல்லாரும் சொல்லி விட்டிருப்பார்கள். மாமுடிமான பல்லி என்றால் சிலருக்குத் தான் தெரியும்” என்றார்.

“அந்த ஊருக்குத் தான் இந்தப் பெயரா? இன்றைக்குத் தான் நான் கேள்விப்படுகிறேன்,” என்றார் மற்றவர்.

வெள்ளைய கவுண்டனூர் என்பதுதான் பழைய பெயர். மாமுடிமான பல்லி என்ற பெயர் ரிஜிஸ்தர் ஆபிசில்தான் தெரியும். நான் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுச் சாட்சிக்குப் போயிருப்பதால் எனக்குத் தெரியும்,” என்றார். நன்றி கூறி விடை பெற்றேன்.

வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து நண்பரைக் கண்டதும் நான்பட்ட தொல்லையை எடுத்துரைத்தேன். “அடடா,” என்று கையை நொடித்தார் அவர். “நான் கடிதத்தில் அதை எழுத மறந்து விட்டேன். வெள்ளைய கவுண்டனூர் அல்லது வெள்ளையானூர் என்று கேட்டால் தான் சொல்வார்கள். நான் தெளிவாக எழுதியிருக்க வேண்டும்” என்று வருத்தத்தை முகத்தாலே தெரிவித்துக் கொண்டார்.

“மாமுடிமான பல்லி என்று கடிதத்தில் முகவரி எழுதினால் வந்து சேருமா?” என்றேன்.

“இரண்டு இடத்தில் தான் அந்தப் பெயர் தெரியும். ஒன்று ரிஜிஸ்தர் ஆபிஸ்; மற்றொன்று தபால் ஆபிஸ். ரிஜிஸ்தர் ஆபிசில் வெள்ளைய கவுண்டனூர் என்று எழுதினால் பத்திரம் செல்லாது, தபால் ஆபிசில் செல்லும். அதனால் வருகிற தபாலில் பெரும்பாலான கடிதங்கள் வெள்ளைய கவுண்டனூர் என்று தான் வரும்.” என்றார்..

‘தென்றலுக்கு அசைவளி என்று அழகான பெயர் வைத்துப் பாராட்டினார்கள் சங்கப் புலவர்கள். நீங்கள் உங்கள் ஊருக்கு மாமுடிமான பல்லி என்று யாருக்கும் தெரியாத பெயர் வைத்துப் பாராட்டுகிறீர்கள்,” என்றேன்.

“பெயராவது பாராட்டாவது! யாருக்குத் தெரியும் அந்தப் பெயர்? இத்ந ஊரில் வாழ்கிறவர்களைக் கேட்டாலே அந்தப் பெயர் ஒருவருக்கும் தெரியாது. பச்சூர்க் கணக்கருக்குத் தெரியும்; மணியகாரருக்குத் தெரியும். எனக்கே போன தை மாதத்துக்குமுன் தெரியாது. எங்கள் வீட்டில் சொத்துப் பங்கிடும் போது எழுதினார்களே, அப்போதுதான் தெரியும். அப்போது தகப்பனார் சொன்னார்,” என்றார் உடனிருந்தவர்.

“என்ன சொன்னார்?” என்று கேட்டார் நண்பர்.

“அந்தப் பெயர் இருபது ஆண்டுகளுக்கு முன்னே வைத்த பெயராம். பொப்பிலி ராஜா அதிகாரத்தில் இருந்த போது, இந்தக் கிராமங்களை எல்லாம் குப்பம் தாலுக்காவில் சேர்த்துச் சித்தூர் மாவட்டத்தில் அடக்குவதற்காக முயற்சி செய்தார்களாம். அதற்காக ஊர்ப் பெயர்களை எல்லாம் தெலுங்குப் பெயர்களாக மாற்றி ரிக்கார்டுகளில் ஏற்றி விட்டார்களாம்,” என்றார் அவர்.

“குப்பம் தாலுக்கா இப்போது எந்த மாவட்டம்?” என்று நான் குறிப்பிட்டேன்.

முன்னே வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்தது; இருபது ஆண்டுகளுக்கு முன்னே சித்தூரில் சேர்த்து விட்டார்கள்.” என்றார் அவர்.

“அப்படியானால் உங்கள் ஊர்க்கு லட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கொடுத்தீர்களே,” என்றேன்.

குப்பம் தாலுக்காவைப் பெரிதாக்கிச் சித்தூர் மாவட்டம் விழுங்கப் பார்த்தது; அதன் தொண்டை சிறியது. ஆகையால் பிடிக்க வில்லை. இந்தக் கிராமங்கள் எல்லாம் சித்தூரின் வாய்க்குள் போக முடியாமல் நின்று விட்டன,” என்றார் அவர்.

“இப்படி இந்தக் கிராமம் ஒன்றுதான் நின்று விட்டதா?” என்றேன்.

“ஏழெட்டுக் கிராமங்கள் நின்று விட்டன,” என்று அவற்றின் பழைய தமிழ்ப் பெயர்களையும், யாருக்கும் தெரியாமல் பதிவு நிலையத்தில் மட்டும் வழங்கும் புதிய பெயர்களையும் சொல்லி வந்தார்.

பழைய தமிழ்ப்பெயர்:

பச்சூர். பழையனூர், புதூர், கட்காவூர், பழைய பேட்டை, கோமுட்டியூர், வலாரிப்பட்டி. 

தெரியாத புதுப்பெயர்:

பந்தார பல்லி, அதன கவுனி பல்லி, கொண்ட சிந்தன பல்லி, கொத்தூர், ஜயந்தி புரம், பய்யப்ப நாயனு பேட்டே, நல்ல கதிரன பல்லி.

இந்தப் பெயர்களை வைக்கத் துணிந்தவர்களின் வீரத்தைப் பாராட்டுவதா, அல்லது அவர்களின் துணிவுக்கு இடம் தந்த தமிழரின் தாராள மனப்பான்மையைப் பாராட்டுவதா என்று தெரிய வில்லை” 

என்கிறார் மு.வ. மிக வருத்தத்தோடு.

Leave a comment